ஆன்மீக கதை - ஒரு பொய் சொன்னதற்கே இத்தனை தண்டனையா...?

ஆன்மீக கதை - ஒரு பொய் சொன்னதற்கே இத்தனை தண்டனையா...?
 | 

ஆன்மீக கதை - ஒரு பொய் சொன்னதற்கே இத்தனை தண்டனையா...?

நான் தான் பெரியவன்.... இல்லை இல்லை நான் தான் பெரியவன்... நீங்கள் இருவருமே இல்லை.... நான் தான் பெரியவன் என்ற போட்டி மனிதர்களுக்குள் ஏற்படுவது இயல்புதான். எல்லோரும் தம்மை முதன்மைபடுத்திக் கொள்வதிலும், தம்மை பெரியவனாக்கி கொள்வதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது மனிதர்களுக்கே ஆன இயல்பு. ஆனால் கடவுள்களுக்குள்ளும் இத்தகைய போட்டி இருந்திருக்கிறது என்று புராண கதைகள் சொல்கின்றன. இந்தக் கதையைப் படித்த பிறகு இப்படியும் இருக்குமா என்று நதிமூலம், ரிஷிமூலம் ஆராயக்கூடாது. கதையின் சாரம்சத்தை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒருமுறை உலகத்தைக் காப்பாற்ற ,காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும், படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் போட்டி ஏற்பட்டது. போட்டியின் முடிவில் நான் தான் பெரியவன் என்று இருவரும் மோதிக்கொண்டனர். இருவரது பிரச்னைகளுக்கு உரிய தீர்வை இருவருமே எடுக்கமுடியாது என்பதால் சர்வத்தை ஆளும் சர்வேஸ்வரனிடமே சென்றனர். சிவபெருமான் மனதுக்குள் புன்னகைத்தபடியே அருகில் இருந்த விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்குமான உரசலை விசாரித்தார்.சரி..உங்கள் விருப்பப்படி இருவரில் யார் பெரியவர் என்று தெரிய வேண்டும் அவ்வளவுதானே.. என் அடிமுடியை கண்டு வருபவரே பெரியவர் என்றார். நீங்கள் சொல்வதே சரி.. நான் தங்களது அடியைக் காண போகிறேன் என்ற விஷ்ணு சிவபெருமானை தொழுது பாதாளத்தை நோக்கி பாய்ந்தார். பிரம்மா  அன்னப்பறவையாக அவதாரம் எடுத்து நான் உங்கள் முடியைக் காண போகிறேன் என்று உயர பறந்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து அடியைக் காண தோண்டியபடியே ஆண்டுக் கணக்கில் சென்றார். வருடங்கள் உருண்டோடின. காலங்கள் காற்றாக கடந்தன. ஆனால் அடியைக் காண முடியவில்லை. மீண்டும் சிவப்பெருமானிடம் தஞ்சமடைந்த விஷ்ணு தன் தோல்வியை ஒப்புகொண்டார். நெடுங்காலமாய் பாதாளத்துக்குள் பாய்ந்த  நம்மால் அடியைக் காண முடியவில்லை. பிரம்மா இன்னும் உயர பறக்கிறாரா என்று விஷ்ணு எண்ணினார்.

பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து பறந்தார்... பறந்தார்..  பறந்து கொண்டே இருந்தார். ஒட்டுமொத்த பறவைகளின் ஆயுளுக்கும் சேர்த்து பறந்தார்... ஆண்டுகள் ஓடின... ஆனாலும் முடியைக் காண வழியில்லை. இன்னும் கொஞ்ச தூரம்... இன்னும் கொஞ்ச தூரம் என்று தன்னையே  சாந்தப்படுத்தியபடி பறந்தார். மேலும் சில ஆண்டுகள் கழிந்தது. மேலிருந்து கீழிறங்கிய தாழம்பூவைக் கண்டதும் அன்னப்பறவை வடிவில் இருந்த பிரம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. நீ எங்கிருந்து வருகிறாய்? என்றார். நான் சிவனின் கூந்தலிலிருந்து வருகிறேன் என்றது. ஓ அப்படியானால் நான் அவரது முடியை நெருங்கிவிட்டேனா என்றார் பிரம்மா. இல்லை... இல்லை.. அதற்கு இன்னும் காலங்கள் செல்ல வேண்டும் .. நான் கீழிறங்கியே ஆண்டுக்கணக்கில் ஆகிறது என்றது தாழம்பூ... சோர்ந்துவிட்ட பிரம்மன் தாழம்பூவிடம் உதவி கேட்டார். நான் சிவபெருமானின் முடியைக் கண்டதாக சாட்சி சொல்கிறாயா என்றார். தாழம்பூவும் சரி என்று ஒப்புக்கொண்டது. 
சிவப்பெருமானிடம் வந்த பிரம்மா.. ஐயனே நான் தங்களது முடியைக் கண்ணார கண்டு தரிசித்தேன் என்றார். அப்படியா என்ற சிவப்பெருமான்.. எப்படி நான் நம்புவது என்றார். நான் பார்த்ததற்கு தங்கள் கூந்தலிலிருந்த தாழம்பூவே சாட்சி.. நாங்கள் இருவரும் தான் கீழே வந்தோம் என்றார். தாழம்பூவும் ஆம்.. அவர் சொல்வது உண்மை தான் என்றது.

சினம் கொண்ட சிவப்பெருமான்... யாரை ஏமாற்றுகிறீர்கள்? நீ எம் முடியையும் காணவில்லை. தாழம்பூவும் உன்னோடு பயணிக்கவில்லை. வழியில் சந்தித்த இருவரும் சித்துவேலை செய்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள்.. அதற்கு உங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு...  பிரம்மனே படைக்கும் தொழிலை பாந்தமாக செய்து வந்தாலும் ... பொய்  சாட்சி சொல்வதற்கு தூண்டிய உன்னை வழிபட பூலோகத்தில் தனி கோயில்களோ, பூசைகளோ இருக்காது என்றார். பின் விளைவுகளை அறியாமல் பொய் சாட்சி சொன்ன காரணத்தினால் என் கூந்தலில் குடிகொள்ளும் இடத்தை இந்நிமிடமே நீ இழப்பாய் என்று தாழம்பூவுக்கு சாபமிட்டார் சிவப்பெருமான்.   அதனாலேயே பிரம்மாவுக்கு கோயிலும், தாழம்பூ பூஜைக்கும் இல்லாமல் போயிற்று.

ஒரு பொய் சொன்னதற்கே இத்தனை தண்டனை என்றால்.. ஒரு பொய்யை உண்மையாக்க எத்தனை எத்தனை பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்களுக்கு இறைவன் மன்றத்தில் என்ன தண்டனையோ..?. ஆகையால் வாழும் காலத்தில்,நாம் பொய் உரைக்காமல் வாழ்வோம். அவசியமான பொய் கூட அடுத்தவரை பாதிக்காமல் இருந்தால் மட்டுமே சொல்வது நல்லது.  மனிதர்களிடமும் , மனசாட்சிக்கும் பயமில்லாவிட்டாலும் இறைவனிடம் பயமிருக்கத்தான் வேண்டும். ஆடவைப்பவனும் அவன் தான். ஆட்டுவிப்பவனும் அவன் தான். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP