ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - போருக்குப் பின் அமைதி

முருகனுக்கு உகந்த ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, மாசி கிருத்திகை ஆகிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூக்காவடி, பால்காவடி எடுத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
 | 

ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - போருக்குப் பின் அமைதி

திருத்தணிகை - ஐந்தாவதுபடை வீடு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணி என்று அழைக்கப்படும் திருத்தணிகை. தனது இச்சா சக்தியான வள்ளியுடன் பாலசுப்பிரமணிய சுவாமியாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.திருவள்ளூர் மாவட்டத்தில், அரக்கோணத்தில் இருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி. 

சூரசம்ஹாரம் முடிந்தவுடன்,வள்ளியை மணந்துகொள்ள வேடர்களுடன் நடத்திய திருவிளையாடலும் முடிந்தவுடன், இளைப்பார அமர்ந்த தலம் இது என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றது.தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்பதும் ஒரு பொருள் என்பதால், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்றும் முருக அடியவர்கள் கூறுவதும் உண்டு. கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், முருகப்பெருமான் எழுந்தருளி அருள் புரிகிறார். மலையின் வடக்கே சிறிது வெண்ணிறமாக இருப்பதால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக காணப்படுவதால் "பிண்ணாக்கு மலை" என்றும் அழைக்கப்படுகின்றன.மலையடிவாரத்தில் உள்ள ‘குமார தீர்த்தம்’,அதில்  நீராடும் பக்தர்களின் பல நோய்களை தீர்த்து வைக்கும் என்பது நம்பிக்கை. மிகவும் தொன்மை வாய்ந்த இத்திருத்தலத்தின் பெருமையை அருணகிரிநாதர், தனது 63 திருப்புகழ்ப் பாடல்களால் பெரிதும் போற்றி பாடியுள்ளார். 

900 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியாரும், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சீபுரம் போலவும், மலைகளில் எல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று கூறியிருப்பதன் மூலம் இக்கோவிலின் தொன்மையை உணர்ந்துக் கொள்ள முடிகிறது.வடலூர் ராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அவரையே ஞான குருவாகக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சியை கண்டு பரவசம் ஆகி முருகப் பெருமானின் அடியவரானார். 
இங்கு சூரசம்ஹாரம் கிடையாது

சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூராக இருப்பினும்,கந்தசஷ்டி விழாஅனைத்து முருகன் கோவில்களிம் நடத்தப்படும். ஆனால்,இங்கு போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரத்தை நடத்துவதில்லை.முருகனுக்கு உகந்த ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, மாசி கிருத்திகை ஆகிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூக்காவடி, பால்காவடி எடுத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.இப்போதும் ஆண்டுதோறும் வள்ளிமலை சுவாமிகள் தொடங்கி வைத்த திருப்புகழ் திருப்படித் திருவிழா இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வேலுண்டு வினையில்லை....

மயிலுண்டு பயமில்லை....

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP