ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - இங்கு மட்டும் இரு மூலவர்கள்

திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.
 | 

ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் -  இங்கு மட்டும் இரு மூலவர்கள்

திருச்செந்தூர் - இரண்டாவது படை வீடு

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். இத்திருதலத்தின் இறைவனின் திருநாமம் செந்தில் ஆண்டவர். முருகப்பெருமான், சூரபத்மனுடன் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தது இங்குதான்.திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.
தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட முருகப்பெருமான் வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், அவனுக்கு துணையாக நின்ற கிரவுஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்குகிறார். வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்ப,சூரபத்மனோ அதை நிராகரிக்கிறான்.

இதையடுத்து, முருகப்பெருமான் அம்பிகையிடம் பெற்ற வேல் கொண்டு, சூரபத்மன் மீது போர் தொடுக்க,சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். மரத்தின் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.சூரபத்மனுடன் போரிட்டு, வெற்றி வாகை சூடி, தேவர்களை சூரபத்மனிடம் இருந்து காப்பாற்றியதால், திருச்செந்தூரானது ஜெயந்திபுரம் என்றும் அழைக்கப்பட்டது. எல்லா கோவில்களிலும் ஒரே ஒரு மூலவர்தான் இருப்பார். ஆனால், திருச்செந்தூரில் மட்டும் பாலசுப்பிரமணியசுவாமி என்றும், சண்முகர் என்று இரு மூலவர்களாக முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார்.

சூரசம்ஹாரம் முடித்த பிறகு, முருகப் பெருமான் சிவலிங்க அபிஷேகத்திற்காக தன்னுடைய கை வேலினால் உண்டாக்கிய "ஸ்கந்த புஷ்கரிணி" தீர்த்தம், நாழிக் கிணறு என்ற பெயரில்  இன்றளவும் திருச்செந்தூரில் காணப்படுகிறது.ஒரு சதுர அடி அளவே உள்ள இந்த கிணறு, கடற்கரையில் அமைந்துள்ள போதிலும் இத்தீர்த்தம் உப்புச் சுவையின்றி தூய நீராகவும், நோய்களைத் தீர்க்கும் குணமுடையதாகவும் இருப்பது அதிசயமாகும்.திருச்செந்தூருக்கு வீரவாகு தேவர் காவல் தெய்வமாக இருப்பதால்,இங்கு வீரவாகு தேவருக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது. 

கர்ப்பக் கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவரான முருகப் பெருமான் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய நான்கு திருக்கரங்களுள் இரண்டு அபய வரத ஹஸ்தங்களையும், மற்றொன்று புஷ்பமேந்தி அர்ச்சனை செய்யும் கரமாகவும், இன்னொரு கரம் ருத்ராட்ச மாலையைத் தாங்கிக் கொண்டும் தவக்கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை இருவரும் அவருடன் இல்லை.திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி பிரசாதம் புகழ் பெற்றதாகும். வேதங்களே இங்கு பன்னீர் மரங்களாக இருந்து முருகப்பெருமானை வழிபடுவதாகவும், விஸ்வாமித்திரர் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, இலைப் பிரசாதத்தை சாப்பிட்டுத் தனக்கு ஏற்பட்ட குன்ம நோயைப் போக்கிக் கொண்டதாகவும் புராண வரலாறு தெரிவிக்கின்றது.

ஆதிசங்கரரும் தனக்கு ஏற்பட்ட காச நோயை செந்தூர் முருகனின் கருணையால் இதே இலை விபூதியை உட்கொண்டு தான் போக்கிக்கொண்டார். அதன் நினைவாக, வடமொழியில் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை இயற்றினார்.திருச்செந்தூர் செல்பவர்கள் தவறாமல் செல்லும் இடம்,அங்கு கடற்கரையில் அமைந்துள்ள வள்ளி குகை.வள்ளி குகைக்கு முன்புள்ள சந்தனமலையில் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. 
முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகம், சூரபத்மனை அழித்து ஆட்கொண்ட கந்த சஷ்டி விழா ஆகியவை இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம், கடற்கரையோரம் நடைபெறும். வருடந்தோறும் இதைக் காண கடல் அலையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் கூடுவது வழக்கம். பக்தர்கள் எழுப்பிடும் அரோகரா ஓசை அந்த அலைகளின் ஓசையையே விஞ்சிவிடும். நாமும் சொல்வோமா அரோகரா .... 

வேலுண்டு வினையில்லை...

மயிலுண்டு பயமில்லை.....

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP