நாம் வைத்திருப்பதில் ஆண்டவனுக்கு தனி பங்கு தர வேண்டுமா? 

ஆம்.. நாம் வைத்திருக்கும் அத்தனை செல்வமும் ஆண்டவனுக்கு மட்டுமே உரியது. இடையில் நம் கைகளில் சில காலம் தங்கியிருக்கிறது அவ்வளவே. அதனால் இருக்கும் வரை பிறருக்கு உதவிகள் செய்யவே ஆண்டவன் செல்வத்தை வழங்கியிருக்கிறான் என்பதை உணருவோம்.
 | 

நாம் வைத்திருப்பதில் ஆண்டவனுக்கு தனி பங்கு தர வேண்டுமா? 

மாங்குடி என்னும் கிராமத்தில்  கிருஷ்ணன் என்பவன் இருந்தான்.  பெயர் தான் கிருஷ்ணன். ஆனால் மழைக்கு கூட கோவிலுக்கு ஒதுங்கமாட்டான். கடவுள்தான் படைத்தான் என்றால் உண்மையை நிரூபி.. நேரில் வரச்சொல் என்று விதண்டாவாதம் பேசுவான். 

 அந்த ஊரில் யாரும் அவனிடம் பக்தியும், இறை நம்பிக்கையும் பற்றி பேசுவதில்லை.  கடவுளுக்கு எதிரானதாக இருக்கும் விஷயங்களில் முதன்மையானவனாக இருந்தான். மறந்தும், கடவுளின் திருநாமங்களை உச்சரிக்காதவனுக்கு போய் கிருஷ்ணா என்று பரமாத்மாவின் பெயரை வைத்திருக்கீறார்களே என்று கூட அவனை கிண்டல் செய்வார்கள்.  

அந்த ஊரில் முத்து என்பவன் இருந்தான்.  நெற்றியில் பட்டையும், காவியுமாய் எப்போதும் ஆலயப்பணிகளில் ஈடுபட்டபடி வளைய வருவான். ஆச்சரியப்படத்தக்க விஷயம்,  கடவுள் பக்தி கொண்ட முத்துவும், பக்தி இல்லாத கிருஷ்ணனும்  சிறுவயது முதலே நண்பர்களாக இருந்ததுதான். 

ஆரம்பத்தில் நண்பனின் மனதில் பக்தியை புகுத்த  எவ்வளோ பிரயத்தனப்பட்டான் முத்து. இதனால், நட்புக்குள் விரிசல் உண்டாகவே அவன் போக்கில் விட்டுவிட்டான்.

ஒருமுறை வியாபார விஷயமாக இருவரும் வெளியூருக்குச் செல்ல நேர்ந்தது. கையில் பணத்துடன் பொருள்களை வாங்க செல்லும்போது,  சில நேரங்களில் இரண்டு நாட்கள் ஆகிவிடும்.  

ஆனால் வழியில் இருக்கும் காட்டை கடந்து செல்லும்போது வழிப்போக்கர்களின் கையில் மாட்டினால் அவ்வளவுதான்.  அதனால் ஒவ்வொருமுறையும் இருவரும் திட்டமிட்டு குறித்த நேரத்தில் சென்று பொருள்களை வாங்கி திட்டமிட்டபடி திரும்பிவிடுவார்கள். 

இந்தமுறை ஊரில் திருவிழா  நெருங்கவே ஆலய பணியில் ஈடுபட்டிருந்த முத்துவுக்கு, வேலையும் அதிகமாயிற்று. பொருள்களை வாங்கும் போது , கோவிலுக்கு வாங்கவேண்டியதையும் சேர்த்து வாங்க வேண்டும் என்று கிருஷ்ணனுடன் கிளம்பினான். 

காட்டை கடந்து,  அடுத்த ஊருக்கு குறித்த நேரத்தில் சென்றுவிட்டார்கள். பொருள்களையெல்லாம் வாங்கி மூட்டை கட்டியபடி கிளம்ப தயாரான கிருஷ்ணனிடம், இன்னும் ஒரு மணிநேரம் காத்திரேன் கிருஷ்ணா. கொஞ்சம் கோயிலுக்கு பொருள்கள் வாங்க வேண்டியிருக்கிறது என்றான் முத்து. 

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்கிறாயே. கடவுளே வந்து வாங்கி தரமாட்டானா என்று  கேலியாய் கேட்டவன்...  இதற்கெல்லாம் நேரம் கிடையாது முத்து. வேண்டுமானால் நீ  பொருள்களை வாங்கி நாளை வந்துவிடு. இரவில் வர வேண்டாம். நான் இப்போதே கிளம்புகிறேன்.

 நேரம் இருக்கிறதே என்றபடி மாட்டுவண்டியில் பொருள்களை ஏற்றினான். கிருஷ்ணன் தனியாக போவது முத்துவுக்கு நல்லதாக படவில்லை. சொல்லவும் தயங்கினான். ஏதோ இந்த மட்டும் கோபப்படாமல் இருந்தானே என்று நிம்மதியுற்றபடி... சரி கிருஷ்ணா நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும். 

ஆனால் வழியில் கவனமாக இரு. கிருஷ்ண பகவானே  உனக்கு துணையாக இருப்பார் என்றான். சுறு சுறுவென பொங்கியது கோபம் கிருஷ்ணனுக்கு.. அதென்ன எனக்கு துணையாக உன் கிருஷ்ணன் வருவது.  யாருடைய உதவியும் எனக்கு தேவையில்லை. மீண்டும் ஒரு முறை கடவுளை துணைக்கு அழைக்காதே. நேரில் வந்தால் அழைத்து வா என்றபடி விடைபெற்று திரும்பினான். 

முத்து, மனதிற்குள்  பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்து அவனுக்கு துணையாக  நீதான் இருக்க வேண்டும்.  நாங்கள் எல்லாமே உன் பிள்ளைகள் தான்.. அவனை காக்கும் பொறுப்பு உனக்கே உரியது என்று வேண்டியபடி பொருள்களை வாங்கி, நீதான் துணையிருக்காயே என்றபடி பகவான் பாடல்களை பாடியபடி காட்டை கடக்க தொடங்கினான். 

வேண்டுதல் முழுக்க  கிருஷ்ணனோடு இரு என்றே இருந்தது.  கிருஷ்ணன் வந்த மாட்டுவண்டியில் ஏதோ கோளாறு போலும்.. மாடு முரண்டு பிடித்ததா.. அல்லது வண்டி பிசகா  என்று தெரியவில்லை. நடு காட்டில் மாட்டிக் கொண்டான். வழிப்போக்கர்களிடம் மாட்டாமல் இருக்க பொருள்களை வைக்கோலில் மறைத்து, அடர்ந்த மரத்தில் ஏறிக்கொண்டான். 

அமாவாசை கும்மிருட்டு வேறு. தூரத்தில் ஓநாயின் ஓலமும், நரியின் ஊளையும் மனதுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியது. சே.. இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே.. முத்துவால் வந்தது. ஒழுங்காக கூட வந்திருக்கலாம் என்றபடி மரத்தின் கிளையைப் பற்றியபடி அமர்ந்தான்.
 
திடுமென பக்கத்தில் ஓர் உருவம் வந்து உட்கார்ந்தது. திடுக்கிட்டு பார்த்தான். அகோரமான  முகமோ... அச்சத்தை உண்டாக்கும் ஒலியோ எதுவுமில்லை. ஆனால் உறுப்புகளே தெரியாமல் நிழலாய் கருமையாய் இருந்த உருவம் மெல்ல நெருங்கியது. நில்.. யார் நீ என்றான்.  

உருவம் மேலும் அவன் புறம் நகர்ந்து வந்தது. கிருஷ்ணனுக்கு கை  கால் உதறியது. சே.. பேசித்தான் தொலையேன்  என்றான்.  நான் பேசுவதற்கு வரவில்லை. உன்னை கொன்று இரத்தம் குடிக்க வந்திருக்கிறேன் என்றது. அப்படியானால் நீதான் பேயா... ஐயையோ நான்.. நான்... இதெல்லாம் நம்பாமல் இருந்தேனே.. அதோடு.. அதோடு... கெட்டது தைரியமாக உலாவும் போது நல்லது செய்யும் கடவுளும் உண்டுதான் போலும். 

என்ன  தவறு செய்துவிட்டேன் கடவுளே. வழித்துணைக்கு போ என்று உன்னை அனுப்பிய போது கூட நீ எங்கே இருக்கிறாய் என்று  கொக்கரித்தேனே... வாழ்வில் பக்தியை உணரும் தருணம் மரணத்தை தழுவும் நிலையில் வைத்துவிட்டாயே.. 

எனக்கு இந்த தண்டனை தேவைதான் என்றாலும் உன் திருநாமம் சொல்லாமல் உலகை துறக்கும் நிலை இனி யாருக்கும் வரக்கூடாது கிருஷ்ணா என்று கைகூப்பி கண்களை மூடியபடி வேண்டினான்.  

சட்டென்று ஒரு ஒளியும், அதைத் தொடர்ந்து அந்த உருவமும் காணாமல் போயிற்று. கண்களை திறந்தவனுக்கு நடந்தது கனவா, நிஜமா என்று கூட புரியவில்லை.  

நடந்தவை அனைத்தும், புரிந்தும் புரியாமலும் இருந்தது. சற்று நேரம்  கிளையிலேயே அமர்ந்திருந்தவன் தூரத்தில் முத்துவைக் கண்டதும் வேகமாக இறங்கி அவனை ஓடிச்சென்று தழுவினான். முத்துவுக்கு ஒன்றும் புரியவில்லை. 

நடந்ததைக் கண்களில் கண்ணீரோடு  திக்கி திணறி சொல்லிய கிருஷ்ணன்  நீ துணையாக அனுப்பினாயே உன் பகவான் தான் என்னை காப்பாற்றினான் முத்து என்றான்.

முத்துவுக்கு  நண்பனின் மனதில் ஏற்பட்ட மாற்றம் நிம்மதியைத் தந்தது. அப்படியானால்  கோயிலுக்கு வேண்டிய பொருள்களுக்கு உன்னால் இயன்ற நிதியை தருவாயா என்றான் தயங்கியபடி...  ஆண்டவனுக்கு பங்கிட்டு கொடுக்கணுமா? 

என்ன விளையாடுகிறாய் என்றான் கிருஷ்ணன். ஐயோ மீண்டும் வேதாளம் முருங்கை மரமா என்று நினைத்த முத்துவுக்கு அடுத்து  கிருஷ்ணன் சொன்னது  மகிழ்ச்சியாக  இருந்தது.  

எல்லாமே  ஆண்டவனுடைய அருளால்  அவனுடையதாக இருக்குபோது பங்கிட்டு கொடுக்க நாம் யார் என்றான் கோயில் பொருள்களை வண்டியில் ஏற்றியபடி..

ஆம்.. நாம் வைத்திருக்கும் அத்தனை செல்வமும் ஆண்டவனுக்கு  மட்டுமே உரியது. இடையில் நம் கைகளில் சில காலம் தங்கியிருக்கிறது அவ்வளவே. அதனால் இருக்கும் வரை பிறருக்கு  உதவிகள் செய்யவே ஆண்டவன்  செல்வத்தை வழங்கியிருக்கிறான் என்பதை  உணருவோம்.   

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP