உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)

நம்முடைய ஜாதகக் கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம்தான் லக்னம். ஜாதகத்தின் முக்கிய உயிர் நாடியே லக்னம்தான். ராசியை வைத்து பலன்களை சொல்லுவதை விட லக்னத்தை வைத்துத்தான் முழுமையான பலன்களை கூற முடியும்.
 | 

உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்-  உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)

நாம் பார்த்து பழகிக் கொண்டிருக்கும் நண்பர்கள் உறவினர்கள் சிலரின் வாழ்க்கை தரம் வசதி வாய்ப்புகள் திடீர் என உயரும்போது சட்டென்று நாம் சொல்லும் வார்த்தை அதிர்ஷ்டம் யோகம் என்பதே. அப்படி ஒரு அதிர்ஷ்டம் யோகம் நமக்கும் கிடைக்கும். அதற்கான வழிகளை வழிபாட்டு முறையை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஜாதகம் தொடர்பாக பேசும்போது ராசிபலன்கள் பார்க்கும் போது நம்மில் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்தது  நட்சத்திரங்களும் ராசிகளுமே. பலருக்கு நட்சத்திரம் கூட தெரிவதில்லை . நம் வாழ்க்கை பாதையை தீர்மானிப்பதில் லக்னங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. இதைப் படிக்கும் வாசகர்கள் தங்களது லக்னத்தை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.நீங்கள் எந்த ராசியின் வழியாக, அதன் அதிபதியான எந்த கிரகத்தின் மூலம் வாழ்க்கையை சந்திக்கிறீர்கள் என்பதைத்தான் லக்னம்  என்கிறார்கள். ராசி என்பது, சந்திரன் எந்த கிரக வீட்டில் இருந்தபோது  நீங்கள் பிறந்தீர்கள் என்று சொல்வது.லக்னம் என்பது நீங்கள் எந்த  மையத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், உங்கள் வாழ்க்கையை  எந்த மையம் நகர்த்துகிறது என்றும் தீர்மானிக்கிறது.

லக்னம் அறிவோம் 

நம்முடைய  ஜாதகக் கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம்தான் லக்னம். ஜாதகத்தின் முக்கிய உயிர் நாடியே லக்னம்தான். ராசியை வைத்து பலன்களை சொல்லுவதை விட  லக்னத்தை வைத்துத்தான் முழுமையான பலன்களை கூற  முடியும்.நம்முடைய வாழ்க்கையை வசந்தமாக மாற்றும் யோகம் நமக்கு கிடைத்திட லக்னக்காரர்கள் தங்களது லக்னத்துக்கு உரியக் கோயில்கள் சென்று வழிபாடு செய்ய நிச்சயமாக பரிபூரண நன்மைகள் கிடைக்கும்.

மேஷ லக்னம்

தினம் சொல்லவேண்டிய மந்திரம்

அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி, வேறாய்

அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப்

பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகிப்

பரம்ஆகிச் சொல்லரிய பான்மை ஆகித்

துகள் அறுசங்கற்ப விகற்பங்கள் எல்லாம்

தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி

நிகர் இல் பசுபதியான பொருளை நாடி

நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்

இந்த தாயுமானவ  சுவாமியின் பதிகத்தை சொல்லிக்  கொண்டிருக்க நல்ல மாற்றங்களை உணரமுடியும். மேலும்  யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கு திருச்சி  மலைக் கோட்டையிலுள்ள தாயுமானவசுவாமி ஆலயம் சென்று அந்தத் திருத்தலத்தில்  உறையும் தாயுமானவ சுவாமியையும் மட்டுவார்குழலி  அம்மையையும் தரிசிக்கவும்.

ரிஷப லக்னம்

தினம் சொல்லவேண்டிய மந்திரம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்ககுடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்- ஆண்டாள் திருப்பாவை 

இயல்பாகவே  சுகவாசியான ரிஷப லக்னககாரார்கள் மேலும்  சுகமான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் திட்டக்குடி எனும் தலத்திலுள்ள சுகாசனப் பெரு மாளையும், வேதவல்லித்  தாயாரையும் முடிந்தபோதெல்லாம் தரிசியுங்கள். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொழுதூரிலிருந்து  13 கி.மீ., விருத்தாசலத்திலிருந்து 32  கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திட்டக்குடி.

மிதுன லக்னம்

தினம் சொல்லவேண்டிய மந்திரம்

கண்ண ணென்னும் கருந்தெய்வம்

காட்சி பழகிக் கிடப்பேனை

புண்ணில் புளிப்பெய் தாற்போலப்

புறநின் றழகு பேசாதே

பெண்ணின் வருத்த மறியாத

பெருமா னரையில் பீதக

வண்ண ஆடை கொண்டு என்னை

வாட்டம் தணிய வீசீரே

மிதுன லக்னத்தினர் செல்ல  வேண்டியத் திருத்தலம் திருத்தங்கலில் உள்ள நின்ற நாராயணப் பெருமாள் கோயில். இந்த திருத்தலத்தில் நின்ற நாராயணப் பெருமாளையும், செங்கமலத்  தாயாரையும் தரிசித்து வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.சிவகாசி -  ஸ்ரீவில்லிபுத்தூர் வழியில்  அமைந்துள்ளது. இந்தத் திருத்தலம்.

கடக லக்னம்

தினம் சொல்லவேண்டிய மந்திரம்

தங்குவர் கற்பக தாருவின் தாயர் இன்றி

மங்குவர் மண்ணில் வாழாப் பிறவியை மால்வரையும்

பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்

கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே - அபிராமி அந்தாதிய 75வது பதிகம்.

கடக லக்னக்காரர்கள் தங்களின் வாழ்க்கையில் மாற்றம் காண மறுமலர்ச்சி ஏற்பட  செல்ல வேண்டிய  ஆலயம்,  அம்மன்குடி . இத்தலத்தில் அஷ்டபுஜ துர்க்கையை தரிசிக்க பாவங்கள் தொலைகிறது.துர்க்கையே, தான் மகிஷனை சம்ஹாரம் செய்த பாவம் போக்க  இங்கே  சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் என்கிறது  புராணங்கள்.கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மன்குடி.  கும்பகோணம் -  உப்பிலியப்பன் கோயில் - அய்யாவாடி வழியாக அம்மன்குடி செல்லலாம். 

சிம்ம லக்னம்

தினம் சொல்லவேண்டிய மந்திரம்

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி

கப்பிய கரிமுகன் அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ

கற்பகம் எனவினை கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்

மற்பொரு திரள்புய மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

மட்டவிழ் மலர்கொடு பணிவேனே-திருப்புகழ்

சிம்ம  லக்னத்தை இயக்கும் மூன்று கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கையைப்   பெறுவதற்கும் தரிசிக்க வேண்டிய திருத்தலம் பழனி. பழனி முருகன் திருக்கோயிலில்  ராஜ அலங்கார முருகனை தரிசனம் செய்ய ராஜ வாழ்க்கை அமையும். மேலும் வீட்டிலும் ராஜ அலங்கார முருகன் படத்தை வைத்து பூஜிக்க வாழ்க்கை வளம் பெறும்.

கன்னி லக்னம்

தினம் சொல்லவேண்டிய மந்திரம்

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம்நீட்டி

வடதிசை பின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி

கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத்துயிலு மாகண்டு

உடலெணக் கருகு மலோ எஞ்செய்கேனுலகத்தீரே!  - தொண்டரடிப்பொடியாழ்வார் 

பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் அருளும் தலத்தை தரிசிக்க  வாழ்வில் நல்ல மாற்றம் உண்டாகும். கடற்கரையோரம்  அருளும் பெருமாள் தரிசனம் மிகச்சிறந்த பலன்களை தரும்.சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் பெருமாள்  பள்ளிகொண்ட கோலத்தில் சேவை சாதித்தார். புண்டரீக முனிவரும் எம்பெருமானின் பாதத்தின் அருகே அமரும் பாக்கியம் பெற்றார். இவ்வாறு  சயனத் திருக்கோலத்தில் காட்சி  தந்தமையால் பெருமாள், ஸ்தலசயனப் பெருமாள் ஆனார். சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் அமைந் துள்ளது ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP