Logo

தண்ணீரிலும் விளக்கெறியும்... பாபாவின் மகிமை

அவரது அருகாமையை அவ்வப்போது பக்தர்களுக்கு உணர்த்துவதாலேயே பிடித்தமான கடவுளாகவும், நம்மிடமிருந்து பிரியாத கடவுளாகவும் மாறிப் போனவர். உண்ணவும் உறங்கவும் மறந்து அவரை மட்டுமே மனதில் நிறுத்தி வைக்கும் பக்தர்களுக்கு அவர் ஒரு மகா புருஷர். ஷீ
 | 

தண்ணீரிலும் விளக்கெறியும்... பாபாவின் மகிமை

பாபா ... இந்த ஒற்றைச் சொல் இன்று  சாமானியன் முதல் சகலமும் பெற்று செளக்யமாக வாழும் மக்கள் வரைக்கும் பிரசித்தமாகியிருக்கிறது.  உனக்கு என்ன வேண்டும்.. என்னிடம் கேள் அடுத்த நொடி நான் உன் அருகில் இருக்கிறேன் என்ற  நம்பிக்கையை அளித்து நம்முடன் பயணப்படும் சக இறைவன். சகலமும் அறிந்தவன். அவரது அருகாமையை அவ்வப்போது  பக்தர்களுக்கு உணர்த்துவதாலேயே பிடித்தமான கடவுளாகவும்,  நம்மிடமிருந்து பிரியாத கடவுளாகவும் மாறிப் போனவர்.  உண்ணவும் உறங்கவும் மறந்து  அவரை மட்டுமே மனதில் நிறுத்தி வைக்கும் பக்தர்களுக்கு அவர் ஒரு மகா புருஷர். ஷீரடிக்கு சென்று பாபாவை வணங்க முடியவில்லையே என்று ஏங்கும் பக்தர்களை வாட வைக்காமல் அவர்களைத் தேடி ஓடி வரும் பக்கிரி கடவுள் இவர். நீ நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் நான் பிரவேசிப்பேன் என்று பார்க்கும் இடமெல்லாம் பக்தனுக்கு நினைவூட்டி தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் தலைச்சிறந்த குரு.  

ஷீரடியில் வசிக்கும் போது யார் என்ன நினைத்தால் எனக்கென்ன என்று தன் போக்கில் வாழ்ந்து  மக்கள் மனதில் வைரமாய் ஜொலித்தவர்.  பாபா ஷீரடியில் மசூதியில் தங்கியிருந்தபோது மண் அகல் விளக்குகளில் விளக்கேற்றுவார்.  இதற்காக  அங்கிருக்கும் எண்ணெய் வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கி  ஊற்றுவதைத்  தன்னுடைய வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் இது எண்ணெய் வியாபாரிகளுக்கு சற்றும் பிடிக்கவில்லை.எல்லோரும் அவரை மகானாக உயர்த்தி வைத்து  பேசுவதும் வேண்டுவதும் அவர்களுக்கு அவர் மீது ஒரு வித வெறுப்பையும், பொறாமையையும் உண்டு பண்ணியது. ஒன்றுமேயில்லாத பக்கிரி நம்மிடம் கையேந்துபவனுக்கு இவ்வளவு அன்பான உபசரணையா என்ற எண்ணம் அவர்களுக்குள்  ஒரு சிறுபிள்ளைத்தனத்தை  உண்டு பண்ணியது.

ஒரு நாள் பாபா எண்ணெய் வாங்க வந்தபோது அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டப்படி எண்ணெய் இல்லை என்றனர். ஒவ்வொரு வியாபாரியும் பாபாவிடம் இதைச் சொல்லி திருப்பி அனுப்பினர். எவ்வித முகபாவனையும் காட்டாமல் பாபா அமைதியாக திரும்பினார். இனி என்ன செய்வான்.. எப்படி விளக்கேற்றுவான் என்று பார்க்கலாம் என்று வியாபாரிகள் தந்திர சிரிப்பு சிரித்தார்கள். விளக்கேற்ற வழியில்லாமல் பாபா பூஜை செய்வதை நிறுத்திவிடுவார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் அவர்கள் மசூதியை அடைந்தனர். ஆச்சரியம் தரும் வகையில் அங்கு பாபா பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வழக்கத்து மாறாக சிறப்பாக செய்திருந்தார். பூஜையைக் காணவந்த வியாபாரிகளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பாபாவின் செய்ககளைக் கவனித்தப்படி அவர் விளக்கேற்றுவதற்கான நேர்த்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பாபாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. பாபா பூஜையை செய்தபடி பாபா எண்ணெய் வாங்க பயன்படுத்தும் பாத்திரத்தை எடுத்தார். காலியாக இருந்த பாத்திரத்தில் தான் குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை நிரப்பினார்.  என்ன செய்கிறார் இந்த  பாபா? இவருக்கு புத்தி சரியில்லை என்று நாம் நினைத்தது சரிதான். மக்களுக்குத்தான் இவரைப் பற்றி தெரியவில்லை. இனி மக்களே இவரை பைத்தியக்காரன் என்று அடித்து விரட்டப்போகிறார்கள். நாம் நினைத்தது நடக்கப்போகிறது என்று தங்களுக்குள் கிசு கிசுத்துக்கொண்டனர்.பாபா மண் விளக்குகளில் திரியை வைத்து எண்ணெய்க்கு பதிலாக தண்ணீரை ஊற்றினார். வியாபார்களிடமிருந்த குழப்பமும், எக்களிப்பும் அங்கிருந்த மக்களிடம் இல்லை. அவர்களுக்கு பாபா என்ன செய்தாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை மாத்திரம் இருந்தது. பாபாவுடன்  இணைந்து தீப ஒளியைக் காண தயாராகினார்கள். வியாபாரிகளுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு இருந்தது. நொடிகள் யுகங்களாயின.  பாபா திரியைப் பற்ற வைக்க தொடங்கினார். விளக்குகள் அனைத்தும் ஒரே சீராக  வழக்கத்தை விட  பிரகாசமாக எரிந்தது.

தண்ணீரிலும் விளக்கெறியும்... பாபாவின் மகிமை

வியாபாரிகள் கண் இமை  தட்டாமல் வேடிக்கைப் பார்த்தனர். இது எப்படிச் சாத்தியம் ? தண்ணீரில் விளக்கு எரியுமா? எண்ணெயில் தண்ணீர் பட்டாலே  படபடவென பொரிந்து அணையும் விளக்கு வெறும் தண்ணீரில்  அமைதியாக எரிகிறதே.. இது என்ன மாயையா? பக்கிரி செய்த மந்திரமா? நொடிக்குள் 100 கேள்விகள் அவர்கள் மனதுக்குள் அலைபாய்ந்தன. பாபாவின் கண்களை நோக்கினார்கள். அதில்  இருந்த அமைதி அவர்கள் உள்ளத்தில் இருந்த ஆன்மிகத்தீயை ஒளிரவைத்தது.  ஐயோ எத்தனை தவறு செய்துவிட்டோம். நாம் நினைத்தது போல் இவர் பக்கிரிஅல்ல...  பலரும் சொல்வது போல மகான் என்று கூட சொல்ல முடியாது.  மகா பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே வைத்திருக்கும் மகா சக்தி படைத்த நம்மை பாதுகாக்கும் இறைவனல்லவா.. இவரிடமா நாம் சிறுபிள்ளைத்தனத்தைக் காட்டிவிட்டோம். இதற்கு மன்னிப்பு கேட்க முடியுமா. மன்னிக்க முடியாத மாபெரும் தவறை இழைத்துவிட்டோமே என்று உள்ளம் உருக வியாபாரிகள் பாபாவின் கால்களில் வீழ்ந்து பேச்சு வராமல் தடுமாறினர்.  எங்களை மன்னியுங்களேன் என்ற வார்த்தைகள் கூட தட்டுத்தடுமாறி ஒலித்தன.

சுற்றியிருந்த மக்களுக்கு அவர்களது செய்கை புரியவில்லை. ஒருவித குழப்பத்துடன் பாபாவையும், வியாபாரிகளையும்  பார்த்த  அவர்கள் விளக்கின் அருகில் இருந்த பாபாவின் தண்ணீர் குவளையும், விளக்கின் ஒளியையும் கண்டு நடந்ததை ஊகித்தனர். பாபா பொறுமையாக அவர்களைப் பார்த்து என்னைச் சோதிக்க விரும்பியது தவறில்லை. ஆனால் நான் எண்ணெய் இல்லாமல் எப்படி விளக்கேற்றுகிறேன் என்பதை ரசிக்க வந்தீர்களே அதுதான் பாவம். இனியும் இப்படி ஒரு செயலை செய்யாதீர்கள் என்று புத்திமதி கூறினார்.

பாபா சொல்வது போல கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவ முடியவில்லையென்றாலும் அவர்கள் படும் பாட்டை ரசிப்பது போன்ற கொடூரம் எதுவுமே இல்லை. பாபாவின் பக்தன் எத்தகையச் சூழலிலும் இத்தகைய கொடுமையைச் செய்ய மாட்டான். அதனால் தான்  பக்தன் மனதில் பரம்பொருளாய் நீக்கமற நிறைந்திருக்கிறான் பக்கிரி என அன்போடு அழைக்கப்படும் பாபா. 

ஓம் சாய் ராம்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP