" எல்லாத்துக்கும் வழிகாட்ட மகாபெரியவா இருக்கார்! "

காஞ்சிக் கருணை மகாப்பெரியவா இன்றும் பலப்பல பக்தர்கள் வாழ்வில் வழி காட்டி வருகிறார். நம் துன்பங்களை தீர்த்து வருகிறார்.
 | 

" எல்லாத்துக்கும் வழிகாட்ட  மகாபெரியவா இருக்கார்! "

மன அமைதி வேண்டி திருத்தலங்களை தேடித்தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது மக்கள் கூட்டம். யாரைப்பார்த்தாலும் மன உளைச்சல்,மன அழுத்தம் ஆகிய வார்த்தைகள் அதிகம் கேட்க முடிகிறது. இப்படி நிம்மதி தேடி அலையும் மக்களை ஆசுவாசப்படுத்தி அருள்பாலித்து வருகின்றனர் ஞானிகளும் சித்த புருஷர்களும்.

காஞ்சி கருணை மகாப்பெரியவா தன்னை நினைத்துருகும் பக்தர்கள் வாழ்வில் தொடர்ந்து பெருங்கருணை பொழிந்து வருகிறார். சித்த புருஷர்களின் அருள் சம்பவங்களை படிப்பதும் ஒரு வகை தவ வழிபாடே.மகாபெரியவா ஒரு நாள் தினசரி செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை உரிய நேரம் கடந்தும் செய்யாமல் ஏதோ யோசனையில மூழ்கி இருந்தார். அவரைப் பார்க்கும் போது,மோன நிலையில ஏதோ தியானத்துல ஆழ்ந்து இருப்பது போல் தெரிந்தது. 

மடத்தில்  உள்ளவர்களுக்கே அதுமாதிரியான சூழல் அபூர்வம்கறதால, அவர்களும் மகாபெரியவாளோட அந்த மோனத்தவத்துக்கு காரணம் தெரியாமல் விழித்தார்கள்.கொஞ்ச நேரம் கழிச்சு கண்விழிச்ச மகான், மடத்தோட மேனேஜரைக் கூப்பிட்டார். ரொம்ப காலத்துக்கு முன்னால மடத்தோட தொடர்புல இருந்த ஒருத்தரோட முகவரியைத் தேடி எடுத்து கொண்டு வரச்சொன்னார்.பலகாலத்துக்கு முன்னால மடத்துக்கு கைங்கரியங்கள் செஞ்சவர் என்பதால், குறிப்புநோட்டுகள் பலதையும் தேடி ஒருவழியா அவரோட விலாசத்தைத் தேடி எடுத்துண்டு வந்தார், மடத்தோட காரியதரிசி.

அந்த விலாசத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட பரமாசார்யா அது சரியான முகவரிதான்கற மாதிரி தலையை அசைத்தார். அப்புறம், "இந்த விலாசத்துக்கு உடனடியா இவ்வளவு பணத்தை (குறிப்பிட்ட தொகையைச் சொன்னார்) தந்தி மணியார்டர் பண்ணிடு, தாமதிக்காதே, ஒடனே போய் அனுப்பிட்டு வா!" என்று சொன்னார் பரமாசார்யா.மகாபெரியவா உத்தரவுக்கு மறுப்பு ஏது? உடனே தொகையை எடுத்துண்டு வேகவேகமா போஸ்ட் ஆபீஸுக்குப்போய், குறிப்பிட்ட முகவரிக்கு தந்தி மணியார்டர்ல பணத்தை அனுப்பிட்டு வந்தார்.

நித்ய அனுஷ்டானத்தைக் கூட தள்ளிவைச்சுட்டு பரமாசார்யா அப்படி ஒரு சிந்தனையில ஆழ்ந்து இருந்தது ஏன்? பலகாலம் முன்னால கைங்கரியம் பண்ணின ஒருத்தரோட முகவரியைத் தேடி எடுக்கச் சொல்லி அந்த விலாசத்துக்கு பணம் அனுப்பச் சொன்னது ஏன்? இதெல்லாம் யாருக்கும் புரியலை!.இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு அப்புறம் ஸ்ரீமடத்துக்கு ஒரு கடுதாசி வந்தது.

"ஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவா ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். போனவாரம் என்னோட தகப்பனார் சிவபதம் அடைஞ்சுட்டார். அவரோட தேகத்துக்கு உரிய உத்தரகிரியைகளைப் பண்ணறதுக்கான செலவுக்கு பணம் இல்லாம ரொம்பவே அல்லாடிண்டு இருந்தேன்.கடைசி நிமிஷம் வரைக்கும், 'எனக்கு எது நடந்தாலும் பயப்படாதே. எப்பவும் மகாபெரியவாளையே நினைச்சுண்டு இரு. எல்லாத்துக்கும் வழிகாட்ட அந்த மகான் இருக்கார்!' அப்படின்னுதான் சொல்லிண்டு இருந்தார் என் தந்தை.

தந்தையார் தவறிப்போன துக்கத்தைவிட அவருக்கான உத்தரகிரியையைச் செய்யறதுக்கு உரிய பணம்  இல்லையேங்கற  துக்கம் எனக்கு அதிகரிச்சுண்டே இருந்த சமயத்துல, ஸ்ரீமடத்துலேர்ந்து பெரியவா உத்தரவுப்படிஅனுப்பப்பட்டதா ஒரு தொகை தந்தி மணியார்டர்ல வந்தது. அந்தப் பணம் இங்கே இருக்கற சாஸ்திரிகள் உத்தரகிரியைப் பண்ணறதுக்குக் கேட்ட தொகை எவ்வளவோ அதுக்கு ரொம்ப சரியா இருந்தது. மகாபெரியவாளுக்கு என்னோட சாஷ்டாங்க நமஸ்காரம்!"அப்படின்னு எழுதி இருந்தது அந்தக் கடிதத்துல. அதைப் படிச்சதும்தான் எல்லாருக்கும் விஷயம் புரிஞ்சுது.

மகாபெரியவா தினமும் செய்யும் சந்த்ரமௌளீஸ்வர பூஜைக்கு பல வருஷங்களுக்கு முன்னால தினமும் வில்வம் பறித்து தரும் கைங்கரியத்தைப் பண்ணிண்டு இருந்தவர் அந்தத் தொண்டர்.'பில்வம் வைத்தா'ன்னே பெரியவா அவரைக் கூப்பிடுவார் அதுக்கப்புறம் அவர் குடும்பத்தோட கொல்கத்தாவுக்கு போய் அங்கேயே தங்கிட்டார். போகும் போது சொல்லிவிட்டுப் போன முகவரியைத் தான் மடத்துல குறித்து வைத்திருந்தார்கள். மகாபெரியவாளோட தீர்க்க தரிசனம் எல்லாம், சாதாரண மனுஷனுக்குப் புரியாத ரகசியம். 

காஞ்சிக் கருணை மகாப்பெரியவா இன்றும் பலப்பல பக்தர்கள் வாழ்வில் வழி காட்டி வருகிறார். நம் துன்பங்களை தீர்த்து வருகிறார்.

ஜெய ஜெய சங்கர ! ஹர ஹர சங்கர !

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP