Logo

பிணிகள் தீர்த்திடும் மாற்றுரைவரதீஸ்வரர்

திருச்சியில் இருந்து முசிறி,நாமக்கல்,சேலம் செல்லும் சாலையில், சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 5கி.மீ. தொலைவில் உள்ளது திருவாசி என்னும் ஊர். இங்குள்ள திருப்பாச்சிலாச்சிராமம் மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயிலை பார்த்த நொடியில் நமது கண்களும் மனமும் நிறைந்து விடுகிறது.
 | 

பிணிகள் தீர்த்திடும் மாற்றுரைவரதீஸ்வரர்

திருச்சியில் இருந்து முசிறி,நாமக்கல்,சேலம்  செல்லும் சாலையில், சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 5கி.மீ. தொலைவில் உள்ளது திருவாசி என்னும் ஊர். இங்குள்ள திருப்பாச்சிலாச்சிராமம் மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயிலை  பார்த்த நொடியில் நமது கண்களும் மனமும் நிறைந்து விடுகிறது.

காவிரி நதிக்கு வடகரையில்  தேவாரப்பாடல் பெற்றது இந்த திருக்கோயில். திருப்பாச்சிலாச்சிராமம் என்பதில் ‘திரு+ பாச்சில்+ ஆச்சிராமம்’ என்ற மூன்று சொற்கள் உள்ளன. ‘திரு’ என்பது தெய்வத்தன்மை, அழகு, செல்வம் ஆகும். ‘பாச்சில்’ என்பது ஊர்ப்பெயர் ஆகும். ‘ஆச்சாரமம் என்பது கோவிலின் பெயர். இந்த திருப்பாச்சிலாச்சிராமம் தற்போது திருவாசி என வழங்கப்படுகிறது.

பிணிகள் தீர்த்திடும் மாற்றுரைவரதீஸ்வரர்

இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் சமீவனேசுவரர், பிரமபுரீசுவரர், மாற்றறிவரதீசுவரர் என பல பெயர்களால் போற்றப்படுகிறார்.
அம்பிகையின் திருநாமங்கள் பாலசௌந்தரி எனவும் பாலாம்பிகை எனவும் வழங்கப்பெறுகின்றன.

தல சிறப்பு 

பிணிகள் தீர்த்திடும் மாற்றுரைவரதீஸ்வரர்

1.உமாதேவியார் இங்குள்ள பொய்கையில் அன்னப்பறவை வடிவில் சிவ பெருமானை ஆகமப்படி பூஜித்து வழிபட்டு வந்ததால்,இறைவன் மகிழ்ந்து சிவ கணநாதர்களுடன் எழுந்தருளினார்.  அம்மையும், தான் அன்ன வடிவில் இந்த பொய்கையில் வழிபட்டதால், அன்னமாம் பொய்கை என்ற திருப்பெயருடன், இதில் நீராடி ஈசனை வழிபடுபவர்களுக்கு பிணிகள் நீங்கி,அவர்கள் இஷ்ட சித்திகளை பெற அருள வேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டாள்.அதனால் இந்தப் பொய்கையில் நீராடி ஈசனை துதிப்பவர்களுடைய எப்படிப்பட்ட வியாதியும் குணமாகும் என்பது ஐதீகம். 

2.திருச்சிராப்பள்ளி வடக்கே உள்ளது கொல்லிமலை. அம்மலைத் தொடரைத் தனக்கு எல்லையாகக் கொண்டு ஆண்டு வந்தவன் கொல்லிமழவன் என்ற சிற்றரசன். கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் (வலிப்பு நோய்) எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, தனது மகளைத் திருக்கோவிலுள்ளே கொண்டுபோய் மணிகண்டேஸ்வரர் சன்னிதி முன்பாக கிடத்தினான். அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை பெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான். 

 பிணிகள் தீர்த்திடும் மாற்றுரைவரதீஸ்வரர்

திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்து கொண்டு மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி, ‘துணிவளர் திங்கள் துளங்கி விளங்க’ எனும் பதிகம் பாடி இறைவனை வணங்க, நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள். சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமை குறிப்பிடத்தக்கது. திருவடியின் கீழ் அதற்குப்பதில் சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார்.மேலும் இத்தலத்து நடராச மூர்த்தியின் விக்கிரகம் முடிந்த சடையினைக் கொண்டுள்ளது.தீராத வியாதியால் துன்பப்படுபவர்கள் இந்த நடராஜ பெருமானுக்கு ஒரு மாதம் காலம் அர்ச்சனை செய்து வந்தால் நோய் நீங்கப் பெறுவார்கள்.இயலாதவர்கள் 12 திரவாதிரை நட்சத்திரத்தன்று அர்ச்சனை செய்தால் பலன் கொடுக்கும் என்கிறார்கள் பயனடைந்தவர்கள். 

பிணிகள் தீர்த்திடும் மாற்றுரைவரதீஸ்வரர்

3.இத்திருத்தலத்தில் ‘கிழி கொடுத்தருளிய திருவாசல்’ என்னும் ஸ்தபன மண்டபம் உள்ளது. சிவத்தல யாத்திரையாக இத்திருத்தலம் வந்த சுந்தரர், தம் அடியவர்கள் பொருட்டு ஈசனிடம் பொன் கேட்டார். ஈசன் சுந்தரரிடம் விளையாட விரும்பி, பொன்னை உடனே கொடுக்கவில்லை. இதனால் சுந்தரர், கோபத்தில் இறைவனை நோக்கி பதிகம் பாடினார். அப்போது ஈசன் தோன்றி சுந்தரருக்கு பொற்கிழி அளித்து மறைந்தார். அப்படி எம்பெருமான் ஈசன் சுந்தரருக்கு பொற்கிழி கொடுத்த இடமே‘கிழி கொடுத்தருளிய திருவாசல்’.

பொற்கிழிப் பெற்ற சுந்தரருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. நாம் கோபத்தில் ஈசனை நோக்கி பதிகம் பாடியும், ஈசன் பொற்கிழி கொடுத்துள்ளாரே. ஒரு வேளை ஈசன் கொடுத்த பொற்கிழியில் இருக்கும் பொன், மாற்று குறைந்திருக்குமோ? என்பதே அந்த சந்தேகம்.சுந்தரரின் எண்ணத்தை அறிந்த ஈசன், தம்முடன் மகாவிஷ்ணுவையும் அழைத்துக்கொண்டு, வணிகர்கள் வடிவில் சுந்தரரிடம் சென்றார். பின்னர் அவரிடம் இருந்த பொற்காசுகளை உரசிப் பார்த்து, தரமானது என்று உறுதியளித்தாராம். இதனால் தான் இத்தல ஈசனுக்கு மாற்றுரைவரதீஸ்வரர் என்று திருநாமம் வந்ததாம்.

பைரவர்

மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயிலில் இருக்கும் பைரவர் தமது வலக்கரத்தில் சூலம் ஏந்தி, தன்னை நாடி வரும்  அடியவர்களை பிடித்திருக்கும் பில்லி, சூன்யம், மாந்திரீகம் முதலியவற்றை அகற்றுகிறார். 

இத்திருக்கோயில் வந்து வழிபட நம்மை பிடித்திருக்கும் நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் சிக்கல்கள் குணமடைகிறது.

ஓம் நமச்சிவாய 

நாதன் தாள் பணிவோம்…

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP