தீபாவளி ஸ்பெஷல் - ‘பாலி பிரதிபதா’- பரந்தாமன் பக்தனை ஆட்கொண்ட நாள்

தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்துக்கள் பாலி பிரதிபதா பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
 | 

தீபாவளி ஸ்பெஷல் - ‘பாலி பிரதிபதா’- பரந்தாமன் பக்தனை ஆட்கொண்ட நாள்

தீபாவளி பண்டிகையின் நான்காவது நாளில் மஹாபலி சக்கரவர்த்தி ,விஷ்ணுவின் குள்ள பிராமண அவதாரமான வாமனரால் முக்தி கொடுக்கப்பட்டார். இந்த நாள் பாலி பிரதிபதா பண்டிகையாக இந்தியாவின் சில பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மஹாபலிக்கு, மஹாவிஷ்ணு ஒரு வரம் கொடுத்தார். அதன்படி ஆண்டுக்கு ஒரு முறை ஒர் நாள் பாலி தனது மக்களை சந்தித்து, இலட்சக்கணக்கான ஒளி விளக்குகள் பிரகாசிக்க, இருளையும் அறியாமையையும் அகற்றிவிட்டு அன்பையும் ஞானத்தையும் பரவச்செய்து பூமிக்கு திரும்புவார் என்று நம்பப்பட்டு வருகிறது. இதன் புராணக் கதையை பார்ப்போம்.

பிரஹலாதன் பேரனும், விரோச்சாவின் மகனுமான மஹாபலி ஒரு நல்ல ஆட்சியாளராக இருந்தபடியினால், அவருடைய மக்கள் அவரை நேசித்தார்கள். மக்கள் அவரது ஆட்சியின் கீழ் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு முறை பிரம்மாவை குறித்து மஹாபலி கடுமையான தவம் செய்தார்.

தவத்தில் மகிழ்ந்த பிரம்மா,மன்னனின் முன் தோன்றினார். மஹாபலி பிரம்மாவிடம்,“மக்கள் எப்போதும் அசுரர்களை கண்டு பயப்படுகிறார்கள். நான் நல்லவன் என்று உலகத்திற்கு காட்ட விரும்புகிறேன். இந்திரனுக்கு சமமான சக்தியை பெற விரும்புகிறேன். நான் போரில் தோற்கடிக்கப்படக்கூடாது என்றார்.

மஹாபலி ஒரு நல்ல மன்னன் என்பதால், பிரம்மா எந்தவொரு கேள்வியும் கேட்காமல், மஹாபலிக்கு தனது வரத்தை வழங்கினார்.அசுரக் குல குரு சுக்ராச்சாரியாரின் உதவியுடன், மஹாபலி விரைவில் மூன்று உலகங்களையும் வென்றார்.

சுக்ராச்சாரியார் பாலியிடம்,“நீங்கள் இப்போது மூன்று உலகங்களை வென்றுவிட்டீர்கள். இருப்பினும் நீங்கள் எப்போதும் மூன்று உலகங்களின் மன்னராக இருக்க விரும்பினால், நீங்கள் 100 அஷ்வமேத யாகம் செய்ய வேண்டும்” என்றார். பாலியும் தனது குருவின் யோசனையை மதித்து, யாகத்திற்கு முழு அளவிலான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார். 

மஹாபலியின் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பைப் பார்த்த  இந்திரன் பொறாமைக் கொண்டான். தேவர்கள் அனைவரும் மஹா விஷ்ணுவிடம் சென்று,அசுரன் ஒருவன் மூவுலகையும் ஆள்வது முறையன்று என்று முறையிட்டனர்.அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த விஷ்ணு மனதிற்குள் சிரித்தார்.

இருப்பினும் அசுர குலத்தில் பிறந்தாலும் நல்லவனான பாலியின் கீர்த்தியை உலகம் அறிய செய்ய வேண்டும் என்ற முடிவுடன், அவர்களைக் காப்பதாக வாக்களித்தார். திருமாலை மகனாக அடைய வேண்டி, காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால்.

இதற்கிடையில் மகாபலி 99 அஷ்வமதே யக்ஞத்தை நடத்தி முடித்திருந்தார். மேலும் ஒரு யாகம் செய்ய வேண்டியிருந்த நிலையில் வாமனன், மஹாபலியிடம் வந்து, தான் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது கடவுள் அவதாரம் என்பதை அறிந்த சுக்கிராச்சாரியார், மஹாபலியை தடுத்தார். குரு சொன்னதை கேளாமல், மூன்றடி மண் தானம் தர மஹாபலி ஒப்புக் கொண்டார். 

தீபாவளி ஸ்பெஷல் - ‘பாலி பிரதிபதா’- பரந்தாமன் பக்தனை ஆட்கொண்ட நாள்

உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு மஹாபலி மன்னனின் விருப்பப்படி,அவர் சிரம் மீது கால்வைத்து அழுத்த, அவர் பாதாளலோகத்திற்குள் சென்றார்.

பாதாளத்தில் அழுத்தப்பட்ட பலி வருத்தப்படாமல், அங்கேயும் தனது ராஜ்யத்தை மீண்டும் எழுப்பி, வழக்கம் போல், தம்முடைய இறைவனைச் சேவித்து,சந்தோஷமாக இருந்தார்.ஆயினும் விஷ்ணுவிற்கு மட்டும் மனதில் நெருடல் இருந்தது.  மஹாபலி தனது உண்மையான பக்தர் என வருந்தினார்.

ஒரு நாள் தன்னை நோக்கி ஒரு இளைஞன் வருவதை பார்த்த பலி, அவனை வரவேற்றார். வந்தவனோ, பலியிடம்,“நீங்கள் உங்கள் ராஜ்யத்தைக் கட்டுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். நான் உங்களுடைய காவல்காரனாக இருந்து,உங்களைப் பாதுகாப்பேன்”என்றான்.  

மகாபலியும் அந்த இளைஞனை தன் காவல்காரனாக நியமித்தார்.சிறிது நாள் கழித்து,மிக அழகாகவும்,தெய்வீகமாவும் தோற்றமளித்த ஒரு பெண் மஹாபலியிடம், “என் கணவர்அவர் செய்த சில தவறுகளை சரி செய்ய சென்றுள்ளார். இன்னும் வீடு திரும்பவில்லை.நான் தனியாக உணர்கிறேன்.

எனக்கு பாதுகாப்பு தேவை. மஹாபலி இராஜ்ஜியத்தில் நீங்கள் உங்கள் பிள்ளைகளைப் போலவே எல்லோரையும் பார்த்துக் கொண்டிருப்பதை நான் கேள்விப்பட்டேன். தயவு செய்து எனக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்றாள்.

மஹாபலி அந்தப் பெண்ணிடம்," நீ என் சகோதரி, என் அரண்மனையில் விரும்பும் காலம் தங்கலாம்! 'என்றார்.ஒரு நாள் மஹாபலி அந்த பெண்ணிடம் நீங்கள் தினமும் சில மந்திரங்களை சொல்வதை கேட்கிறேன்.

'நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்கள்?' என்று கேட்டார்.அதற்கு அந்த பெண் மகாபலியைப் பார்த்து, 'நீ என் சகோதரன்! நான் உனக்காக பூஜை செய்கிறேன்!” என்றாள்.மஹாபலி மனம் நெகிழ்ந்து,“ சகோதரியே,உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், நான் தருகிறேன்' என்றார்.

பெண் புன்னகைத்தாள், 'என் கணவர் எனக்கு வேண்டும். அவரை நீங்கள் மட்டும் தான் என்னிடம் கொடுக்க முடியும் என்றாள். மஹாபலி குழப்பமடைந்து,“யார் உன் கணவன்.நான் எப்படி அவரை உனக்கு தர முடியும்” என்று கேட்டார்.

அந்த பெண் காவலாளியை நோக்கி, 'இவர் தான் என் கணவர் என்று காட்டிவிட்டு மறைந்து விட்டாள்.அங்கே மஹாவிஷ்ணு லட்சுமி தேவியுடன் அவருக்கு காட்சியளித்தார்.இத்தனை நாள் தனக்கு காவல்காரனாகவும், சகோதரியாகவும் இருந்தது உலகை காக்கும் விஷ்ணுவும்,லக்ஷ்மி தேவியும் என்பதை அறிந்து மனம் நெகிழ்ந்த மஹாபலி அவர்களது காலடியில் விழுந்து வணங்கினார்.

விஷ்ணு, “மஹாபலி ,உன் பக்தி என்னை இங்கு இழுத்துவிட்டது.நான் உன்னுடன் இருந்தாக வேண்டியது அவசியமாகிறது. இந்திரனின் ஆட்சியின் பிறகு, நீ தான் அடுத்த இந்திரன், இது என் வாக்குறுதி. ஒரு நல்ல ஆட்சியாளனாக, இருப்பாயாக என்றார்.  

மஹாபலி சக்கரவர்த்தி ஸ்ரீமகாலஷ்மியிடம், “தாயே, உன் பக்தர்களின் இல்லத்தில் நீ நிரந்தரமாக இருக்க என்ன செய்ய வேண்டும். உன் விருப்பம் என்ன?” என்று கேட்டார். அதற்கு ஸ்ரீலஷ்மி தேவி,“ஐப்பசி மாதம் - கிருஷ்ணபட்சத்தில், திரயோதசி முதல் அமாவாசைவரை, தீபம் ஏற்றி யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களின் இல்லத்தில் ஆண்டு முழுவதும் இருப்பேன்.” என்றார்.தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்துக்கள் பாலி பிரதிபதா பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

ஸ்ரீமகாலஷ்மி அன்னை அருள்படி தீபாவளியில் தீப ஒளி ஏற்றுவோம். மஹாபலி புகழ் நிலைத்திட பாலி பிரதிபதா பண்டிகையை கொண்டாடுவோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP