யூடியூப் சேனல்ல வளர்ச்சி வந்துட்டே இருக்கும்: நீ யாருடா கோமாளி டீம் பேட்டி

நீ யாருடா கோமாளி டீம் செய்த கடந்தாண்டு ராம்சானின் போது பிரியாணி பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தை கலக்கி கொண்டு இருந்தது. பின் அவர்களின் தொடர் முயற்சி வடசென்னை படத்திற்காக ஒரு வீடியோவை உருவாக்கும் அளவிற்கு அவர்களை கொண்டு வந்துள்ளது.
 | 

யூடியூப் சேனல்ல வளர்ச்சி வந்துட்டே இருக்கும்: நீ யாருடா கோமாளி டீம் பேட்டி

கடந்தாண்டு ராம்சானின் போது பிரியாணி பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தை கலக்கி கொண்டு இருந்தது. நீ யாருடா கோமாளி என்னும் யூடியூப் சேனலை வைத்திருக்கும் பிபியன் நிஷாந்த், மதன், பௌமிக் பிரகாஷ், தினகரன், தீபன் ராஜ், ஜெயந்த் ஆகியோர் இணைந்து உருவாக்கிய வீடியோ அது. அதற்கு பின் அவர்களின்  தொடர் முயற்சி தற்போது வடசென்னை படத்திற்காக ஒரு முக்கியமான வீடியோவை உருவாக்கும் அளவிற்கு அவர்களை கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் வௌயாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் அந்த படத்திற்காக The Life in VADACHENNAI என்னும் வீடியோவை இந்த குழுதான் உருவாக்கி உள்ளனர். தற்போது லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கும் இந்த இளம் டீமை தொடர்பு கொண்டு வடசென்னை தொடங்கி யூடியூப்பில் சேனல்களின் எதிர்காலம் வரை பேசினோம்... 

வடசென்னை படத்திற்காக வீடியோ செய்யும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

வட சென்னை படத்தோட டிஜிட்டல் பார்டனர் டிவோ மூலமாக தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. அவங்க கூட முன்பே நாங்க  வேலை செய்திருந்தோம். வட சென்னைக்கு இப்படி ஒரு வீடியோ பண்ணனும்ற அசைன்மென்ட் வந்த பிறகு எங்க கிட்ட சொன்னாங்க.   நாங்களும் எங்களோட ஐடியாவ சொன்னோம். அது ஓ.கே ஆகி நாங்களே பண்ணிட்டோம். 

வட சென்னை டீம்மோட ரியாக்‌ ஷன் எப்படி இருந்தது? 

இந்த படத்துக்கு பெரியளவில ப்ரோமோஷன் பண்ணல. நாங்கள் இந்த டாக்குமெண்டிரி பண்ண போறதா உறுதியான பிறகு ஓவரா ப்ரோமோட் பண்ணிட வேண்டாம்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கும் படத்துடைய கதை என்ன என்பது பற்றி எந்த யோசனையும் இல்லை. நாங்க பொதுவாக வடசென்னை பற்றி என்ன சொல்லனுமோ அதையெல்லாம் சேர்த்தோம். வீடியோ முடிச்சி கொடுத்த பிறகு எந்த மாற்றமும் இல்லாம அப்படியே தான் வெளியிட்டாங்க. அதுவே நாங்க  சரியா பண்ணி இருக்கோம்னு நினைக்க வைத்தது. ஆனா... வெற்றிமாறனும், தனுஷும் பிஸியாக இருக்கிறதலா இன்னும் பார்க்கலைனு சொன்னாங்க. 

இந்த வீடியோ வெளியானதும் சோஷியல் மீடியாவில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததே...

ஆமா... நாங்க நேரடியா மக்கள் கிட்ட இருந்து விடைகள வாங்கி இருந்தோம். சோ... ரொம்பா உண்மையா இருந்ததா நிறைய பேர் சொன்னாங்க. இந்த மாதிரியான வீடியோக்களுக்கெல்லாம் பெரிய ரெஸ்பான்ஸ் கொடுக்க மாட்டாங்க. ஆனால். இந்த வீடியோவை ஒரு மில்லியன் பேர் வரைக்கும் பார்த்திருக்காங்க. இந்த அளவுக்கு ஆதரவு இருக்கும்னு எதிர்பார்க்கல. குறிப்பா அந்த வீடியோவில் வடசென்னை பற்றி ரொம்ப பாவம்னுலாம் நாங்க எதையும் சொல்லிட, அவங்களோட கொண்டாடத்தையும் காட்டி இருக்கோம். இயல்பா இருந்ததுனால நிறைய பேருக்கு பிடிச்சி இருந்தது. 

யூடியூப் சேனல்ல வளர்ச்சி வந்துட்டே இருக்கும்: நீ யாருடா கோமாளி டீம் பேட்டி

              ஓர் ஆண்டில் ஓன்றரை லட்சம் சப்ஸ்கிரைப்பர்ஸை தாண்டிய நீ யாருடா கோமாளி சேனல்

இந்த வீடியோ ரெடி பண்ணதும், நிச்சயமா படக்கழு ஓ.கே சொல்லிடுவாங்கன்ற நம்பிக்கை இருந்துதா?

சுத்தமா எங்களுக்கு நம்பிக்கை இல்ல. படத்துக்கு இவ்வளவு தான் பிரோமோஷன் பண்ணணும் அப்படினு முன்னாடியே ஒரு முடிவில் தான்  இருந்தாங்க. எங்க வீடியோவும் எதையும் மிகை படுத்தாம இருந்ததுனால தான் ஓ.கே சொன்னாங்க.

படம் பார்த்த பிறகு நீங்க சரியான விஷயங்கள தான் ஆவணப்படுத்தினீங்கனு தோனுச்சா?

100 சதவீதம் அந்த எண்ணம் வந்தது. படம் பார்க்கும் போது இங்க தானே நாம ஷுட் பண்ணோம், இதை தான சொல்ல விரும்பினோம் என நிறைய பேசிக்கிட்டோம். எங்களுக்கு படத்தோட கதை பற்றி ஒரு சின்ன விஷயம் கூட சொல்லல, நாங்களாகவே யோசிச்ச விஷயங்கள் தான் இந்த வீடியோ. சோ படம் பார்த்து முடிக்கிறப்போ சரியா தான் ஆவணப்படுத்தி இருக்கோம்னு ரொம்ப நிறைவாக இருந்தது.

வடசென்னையை பற்றிய சின்ன சின்ன நுணுக்கங்களும் காட்டி இருந்தீர்களே...

எங்கள் குழுவில் யாருமே வடசென்னை கிடையாது. நாங்களும் படங்களில் மட்டும் தான் பார்த்திருக்கிறோம். இந்த பிராஜக்ட் எங்களுக்கு கிடைத்த உடன் எந்த திட்டத்தையும் வைத்திருக்கவில்லை. பின் வடசென்னையில் 3 நாட்கள் சுற்றினோம். அப்போது ஐடியாக்கள் கிடைத்தன. அங்கிருந்தவர்களும் எங்களுக்கு நிறைய ஒத்துழைத்தார்கள். வட சென்னையை பற்றி தென் சென்னையில் இருப்பவர்களின் பார்வை என்ன... அவர்களின் பார்வை குறித்து வடசென்னையில் இருப்பவர்களின் கருத்து என்ன என்பதை காட்ட வேண்டும் என்று நினைத்தோம். சென்னை என்றால் வெயில் தான் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. இந்த வீடியோவின் படப்பிடிப்பின் போது மழை பெய்தது. அந்த வீடியோ முழுக்க ஈரப்பதத்தோடு இருந்தது இன்னும் எமோஷனை அதிகரித்தது.

தற்போது வடசென்னையை பற்றிய உங்களது பார்வை என்ன?

இதற்கான படப்பிடிப்பின் போது வடசென்னையில் அதிகமாக  கூட்டம் இருக்கும் என்ற கருத்தை பலரும் கூறினர். ஆம்... அது உண்மை தான். அதிகமான கூட்டம் இருக்கும் இடம் தான் அது. இரவு வரை அனைவரும் வெளியே தான் இருக்கிறார்கள். சென்னையில் மற்ற இடங்களில் வாட்ச்மேனை தவிர யாரையும் பார்க்க முடியாது. வடசென்னையில் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். இதில் தான் பார்வை மாறுகிறது. அந்த கூட்டத்தை வெளியே இருந்து பார்க்கும் போது அது வெறும் கும்பல். உள்ளே சென்று பார்த்தால் அதில் அவர்களின் ஒற்றுமை தெரிகிறது. தென் சென்னையில் இருக்கும் தனிமைப்படுத்தப்படுதல் என்பது வடசென்னையில் இல்லை. நாம் இதுவரை படங்களில் பார்த்ததெல்லாம் உண்மை தான். ஆனால் அவற்றை யார் இடத்தில்  இருந்து பார்க்கிறோம் என்பதில் அனைத்தும் வேறுபடுகிறது. 

யூடியூப் சேனல் பக்கம் நிறைய பேர் வந்துவிட்டார்கள்... போட்டி அதிகமாக இருக்குமே?

இணையவசதி இருப்பவர்கள் யார் வேண்டும் என்றாலும் யூடியூப் சேனலை தொடங்கி விடலாம். ஆனால் எத்தனை நாட்களுக்கு தொடர்கிறது என்பது தான் முக்கியம். தொடங்குவதற்கும் நிலையாக இருப்பதற்கும் இடையில் ஒரு பயணம் இருக்கிறது. கடந்தாண்டு 'நீ யாருடா கோமாளி' சேனலை தொடங்கினோம். அப்போது இதில் எதிர்காலம் இருக்குமா என்று எல்லாம் எங்களுக்கு தெரியாது. ஆனால் இப்போது பள்ளி மாணவர்கள் கூட  சேனல் தொடங்குகிறார்கள். ஒரு நாளுக்கு 5 புதிய சேனல்கள் வருகின்றன.ஆனால் ஒரு மாதத்தில் அவர்கள் இதில் இருந்து வெளியே சென்று விடுகிறார்கள். இதெல்லாம் தாண்டி நாம் என்ன கண்டென்ட் தருகிறோம் என்பதும் முக்கியம். அதற்கான குழு, திட்டம், பொருளாதாரம் எல்லாம் தேவை. ஆறு மாதத்திற்கு எந்த வருமானமும் இருக்காது என்ற மனநிலையோடு தான் இதில் இறங்க வேண்டும்.

இந்த துறையில் வளர்ச்சி வந்து கொண்டே இருக்கும். அப்போது கண்டென்டையும் தாண்டி மார்க்கெட்டிங்கையும் பார்க்கவேண்டும். யூடியூடிப்பில் வெற்றி நிச்சயம் இருக்கும். இது ஒரு ஜீரோ இன்வேஸ்ட்மென்ட் பிசினஸ் தான். காலப்போக்கில் எங்களுக்கு கிடைக்கும் சப்ஸ்கிரைப்பர்ஸ் தான் இன்வேஸ்ட்மென்ட். மேலும் யூட்யூப் சேனல் என்பது அதோடு நிற்காது. 

யூடியூப் சேனல்ல வளர்ச்சி வந்துட்டே இருக்கும்: நீ யாருடா கோமாளி டீம் பேட்டி

                                                           நீ யாருடா கோமாளி டீம்

ஒரு ப்ரோமோஷனுக்கான எங்களிடம் வரும் போது அவர்களிடம் எங்களுக்கு இத்தனை லட்சம் வியூவ்ஸ் வரும், எங்களிடம் இத்தனை மீம்ஸ் பேஜ்கள் இருக்கிறது என்றெல்லாம் கூறி தான் வியாபாரம் செய்ய வேண்டும். இது தற்போது விளம்பரத்துறை போலதான் மாறி இருக்கிறது. 

யூடியூப்பிற்கு நிரந்தரமான பார்வையாளர்கள் இருக்கிறார்களா?

யூடியூப்பை பொறுத்தவரை எப்போதும் ஆடியன்ஸ் இருந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு ஒரு சேனலில் வீடியோவுக்கு கீழ் மற்றவர்களின் வீடியோக்கள் இருக்கும். மேலும் யூடியூப்பில் ஒரு பின்னல் இருக்கிறது. அதுப்படி நாங்கள் எந்தகால இடைவேளியில் வீடியோ போடுகிறோம் என்பது கூட முக்கியம். அப்போது யூடியூப்பே வீடியோவை புஷ் செய்யும். எனவே பார்வையாளர்கள் நிரந்தரமாகவும், அதிகரித்துக் கொண்டும் தான் இருப்பார்கள். டி.வி போல எங்களுக்கும் பிரைம் டேஸ் இருக்கின்றன. வெள்ளிக்கிழமை அப்லோட் செய்தால் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து பார்வையாளர்கள் இருப்பார்கள். இதையெல்லாம் தாண்டி புது புது கண்டென்டும் தேவை.

உங்களுக்கு பிரபலம் என்ற அடையாளம் கிடைத்துவிட்டதா?

எங்கள் சேனல் மூலம் தான் வடசென்னைக்கு வீடியோ செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. பெரிய பிராண்டுக்கு வீடியோ செய்ய வேண்டும் என்பது சின்ன விஷயம் அல்ல. பாய்ஸ் படத்தில் காட்டுவது போல தான். ஒரு பெரும் நிறுவனத்திற்காக வேலை செய்ய வாய்ப்பு கிடைப்பது சுலபம் அல்ல. எங்களுக்கு இது யூடியூப் மூலம் சாத்தியமாகி உள்ளது. மேலும் வெளியே போகும் போது மக்கள் எங்களை அடையாளம் காண்கிறார்கள்.

அடுத்தடுத்த இதில்லேயே இருக்கும் திட்டம் இருக்கிறதா?

நிச்சயமாக... நாங்கள் முழு நேரமாக சினிமாவுக்கு சென்றாலும் இந்த சேனலை தொடர்ந்து கொண்டே தான் இருப்போம். தற்போது இன்டர்ன்ஸ் கூட எடுக்கிறோம். ஆர்வம் இருப்பவர்கள் நிச்சயமாக எங்களை தொடர்பு கொள்ளலாம். 

இந்த டீமோடு சேர்ந்து பணியாற்ற விரும்புபவர்கள்: Nee Yaaruda Komali

மேலும் விவரங்களுக்கு: neeyaarudakomali@gmail.com

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP