மூன்றாவது நாயகர்கள் - பகுதி 3 | ஈகோ அண்டாத ஜெமினி கணேசன்

ஜெமினி இதை அறிந்தும் கூட எந்தவித ஈகோவும் இல்லாமல், எந்தவித ரசிகர் சண்டையிலும் சிக்காமல் மற்ற இருவரையும் விட ஒருபடி அதிகமாக ஒரு நல்ல ஜென்டில்மேனாக இருந்தார்.
 | 

மூன்றாவது நாயகர்கள் - பகுதி 3 | ஈகோ அண்டாத ஜெமினி கணேசன்

'பெண்ணின் பெருமை' என்றொரு படம். தேவதாஸ் கதைக்கு பிறகு நீண்ட நெடிய வரலாறு கொண்ட கதை இது. கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லா மொழிகளிலும் நிறைய முறை எடுக்கப்பட்ட ஒரு கதை. தேவதாஸை போல் பெங்காலியில் நாவலாக எழுதப்பட்ட இந்தக் கதையை முதலில் தெலுங்கில் எடுக்க, பின்னர் பல்வேறு விதமாக அவதாரம் எடுத்து இறுதியில் பாக்யராஜின் 'எங்க சின்ன ராசா'வில் வந்து இந்த பயணம் முடிவடைந்தது. 

ஜெமினி கணேசன் மனநிலை தவறியவராக நடித்த இந்தப் படத்தில் அவரின் தம்பியாக நடித்தவர் சிவாஜி கணேசன். ஆம்! சிவாஜியும், ஜெமினியும் இணைந்து  நடித்த முதல் படம் இது. பின்னர் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்த ஒரு படத்தை 'காலம் மாறிப்போச்சு' என்கிற பெயரில் ஏ.வி.எம் செட்டியார் எடுத்தார். ஜெமினி கதாநாயகனாக நடித்த இந்தப் படம்தான் முதன்முறையாக ஒரு பாடலின் டியூனை திருடியதற்காக நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்ட பெருமையைக் கொண்டது.

இந்தப் படம் எடுக்கும்போதே 'மதுரை வீரன்' படமும் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. முதலில் இரண்டு படத்தின் பாடல்களும் வெளியாகின. இரண்டிலுமே விவசாயத்தின் பெருமையை பாடும் ஒரு பாடல் இடம்பெற்றது. வரிகள் வேறுவேறாக இருந்தாலும் கூட டியூன் அப்படியே காப்பியடிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து ஏ.வி.எம் செட்டியார், 'மதுரை வீரன்' தயாரிப்பாளர் லேனா செட்டியார் மீது வழக்கு பதிய, வழக்கை விசாரித்த நீதிபதி, "இரண்டுமே ஒரு நாட்டுப்புற பாடலை அடிப்படையாக வைத்து மெட்டமைக்கப்பட்ட பாடல் என்பதால் இதில் மெட்டு தனக்குத்தான் சொந்தம் என்று யாரும் உரிமை கொண்டாட இயலாது" என தீர்ப்பு வழங்கினார். அட்லீ சொன்ன ஏழு ஸ்வரம் மேட்டர் இப்போது நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

மூன்றாவது நாயகர்கள் - பகுதி 3 | ஈகோ அண்டாத ஜெமினி கணேசன்

சாவித்திரியின் வாழ்க்கையில் மிக முக்கியமான படம் 'மாயாபஜார்'. மொத்த தெலுங்கு திரையுலகும் சாவித்திரியை கொண்டாட துவங்கிய புள்ளி இந்தப் படம். படகில் என்.டி.ராமாராவ், ஏ.வி.ரங்காராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ் என பல ஜாம்பவான்கள் இருந்தும் எல்லாரையும் சாவித்திரி தூக்கி சாப்பிட்ட படம் இது. தமிழில் நாகேஸ்வர ராவ் நடித்த 'அபிமன்யூ' பாத்திரத்தில் ஜெமினி நடித்தார். சின்ன கதாபாத்திரம்தான் என்றாலும் கூட சாவித்திரியுடனான அவரின் நெருக்கம் இன்னும் அதிகமானதிற்கு இந்தப் படம் ஒரு கருவியாக இருந்தது. தெலுங்கில் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நாகேஸ்வர ராவ் இரண்டாவது மாடியிலிருந்து தரையில் குதிப்பதாக ஒரு காட்சி வரும். தமிழில் நடித்த ஜெமினி கணேசனே அந்தக் காட்சியை தெலுங்கிலும் செய்தார். அதாவது நாகேஸ்வர ராவிற்கு டூப் போட்டார். 

தெலுங்கில் இருந்து கன்னடத்திற்கும் இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டது. இதில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா? மாயாபஜாருக்கு பிறகு கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்ட ஒரு இந்தியப் படம் ரஜினி நடித்த கோச்சடையான்தான். கிட்டத்தட்ட 50 வருடங்களாக எந்த இந்திய படமும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்படவே இல்லை என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழில் எப்படி 'சந்திரலேகா'வை நாம் கொண்டாட வேண்டுமோ, அதே அளவு கொண்டாட்டத்தை தெலுங்கில் இந்த 'மாயாபஜார்' படத்தை கொண்டாடினார்கள். பிறிதொரு சமயத்தில் இப்படத்தை பற்றி இன்னும் விரிவாக எழுத ஆசைப்படுகிறேன்.

மூன்றாவது நாயகர்கள் - பகுதி 3 | ஈகோ அண்டாத ஜெமினி கணேசன்

"சபாஷ் சரியான போட்டி.." என பி.எஸ்.வீரப்பா தனது பிரமாதமான குரலில் சொல்லும் வசனம் உங்களுக்கு கண்டிப்பாக நினைவிலிருக்கும். 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் இடம்பெற்ற வசனம் அது. இன்றும் தமிழின் மிகச் சிறந்த நடன அமைப்பை கொண்ட பாடல்களில் ஒன்றாக திகழும் "கண்ணும் கண்ணும் கலந்து" இடம்பெற்ற படம் இது. என்னதான் எம்ஜிஆர் அளவிற்கு வாள் சண்டைக்காட்சிகளில் ஜெமினி மிளிரவில்லை என்றாலும் கூட அவரும் போட்டியில் இருக்கிறார் என்பதை உணர்த்திய படம்.

ஜெமினியின் மிகப்பெரிய பலம் மற்றும் பலவீனம் எல்லாமே அவர் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பார் என்பதுதான். என்னதான் அவர் தனிப்பட்ட முறையில் கதாநாயகனாக நடித்து நல்ல பெயர் எடுத்துக்கொண்டிருந்தாலும் கூட சரியான வாய்ப்பு வரும்போதெல்லாம் அவர் மற்ற முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடிக்க தயங்கியதேயில்லை. இதில் என்ன விசேஷம் என்றால், அந்த காலகட்டத்தில் இப்படி பல முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பது பெரிய விஷயமாக இருந்திருக்கவில்லை. ஆனாலும் கூட எம்ஜிஆரும் சிவாஜியும் ஒரே ஒரு படத்தில்தான் சேர்ந்து நடித்தார்கள். இந்த இடைவெளியை அவர்களே தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டதால் அவர்கள் இருவரின் ரசிகர்களுக்கும் அது வசதியாக போய்விட்டது. 

மூன்றாவது நாயகர்கள் - பகுதி 3 | ஈகோ அண்டாத ஜெமினி கணேசன்

ஆனால், ஜெமினி வேகமாக வளர்ந்து வந்தாலும் கூட எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருடனும் சேர்ந்து நடித்ததால் கூட்டத்தை இழுக்கும் நடிகராக மாறாமலேயே போனார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தையே எடுத்துக்கொள்வோம். அவர் வெள்ளையத்தேவனாக சிறப்பாக நடித்திருந்தாலும் கூட சிவாஜியியை தவிர வேறு யாரையுமே இந்தப் படத்தில் நாம் நினைவுகொள்வதில்லை. அதேபோலத்தான் 'கப்பலோட்டிய தமிழன்' படமும். ஆனால் அதற்காக ஜெமினிக்கு தனித்துவமே இல்லாமல் போய்விட்டது என்று நாம் கூற இயலாது. அடுத்தடுத்து வந்த 'கல்யாணப்பரிசு', 'களத்தூர் கண்ணம்மா' போன்ற படங்கள் அவரை ரொமான்டிக் ஹீரோவாக மாற்றியது. சொல்லப்போனால் தமிழில் முதன்முறையாக 'ரொமான்டிக் ஹீரோ' என்கிற ஜானரில் அடையாளம் காணப்பட்ட முதல் தமிழ் நடிகர் ஜெமினிதான். அதுதான் அவருக்கு 'காதல் மன்னன்' என்கிற பட்டத்தையும் பெற்றுத் தந்தது.

ஜெமினியின் தனித்துவமாக நான் நினைப்பது, சிவாஜியே எதிரில் இருந்தாலும் தனக்கு கிடைத்த வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் ஒரு திறமை அவருக்கு அதிகமாக இருந்தது. 'பாசமலர்' படம் அதற்கு மிகச் சிறந்த உதாரணம். வழக்கமாக இந்த மாதிரி கதைகளில் சிவாஜியிடம் வெளிப்படும் அந்த மெல்லிய வில்லத்தனம் அவரது நடிப்பை வேறொரு தளத்தில் கொண்டுவைக்கும். 'பாசமலர்' படத்தில் ஒரு கட்டத்தில் அதே வில்லத்தனம் ஜெமினியிடம் வெளிப்படும். வீட்டுப் பெண்களின் பேச்சை கேட்டுக்கொண்டு சாவித்திரியை மறுதலிக்கும் காட்சிகளில் அட்டகாசமாக ஸ்கோர் செய்திருப்பார் ஜெமினி. இந்த மாதிரி படங்களில் கதையின் போக்குக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் ஒரு நடிகராக அவர் மாறிவிடுவார் என்பது இதன் மூலம் தெளிவாக புரியவருகிறது.

மூன்றாவது நாயகர்கள் - பகுதி 3 | ஈகோ அண்டாத ஜெமினி கணேசன்

ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக எடுக்கப்பட்ட தமிழ்ப் படமான 'தேன் நிலவு' தமிழின் மிகச் சிறந்த ரொமான்டிக் படங்களில் ஒன்று. ஆங்கில ரொமான்டிக் படங்களில் மட்டுமே காணப்படும் நாயகர்களை ஒத்த முக அமைப்பை, நடிப்பை நீங்கள் ஜெமினியின் உருவில் இந்தப் படத்தில் பார்க்கலாம். ஆனால் இதில் ஆச்சர்யப்படவேண்டிய ஒரு விஷயம், இந்த ரொமான்டிக் முகத்தை 'நான் அவனில்லை' என்கிற படத்தில் வில்லனாக காட்ட பாலச்சந்தர் முயன்றதுதான். படம் தோல்வியடைந்ததன் பின்னணியும் இதுதான். இதேவேடத்தில் அப்போது சிவாஜி நடித்திருந்தால் படம் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும். கதைப்படி அழகான இளைஞன் ஒருவன் பெண்களை காதலித்து ஏமாற்றுவது என்பதால் ஜெமினியின் இமேஜிற்கு இந்தப் படம் பொருந்தாமல் போனது. கிட்டத்தட்ட ஒன்பது வேடங்களில் இந்தப் படத்தில் ஜெமினி தோன்றுவார். மாறுவேடம் போடுவதில் மன்னரான எம்ஜிஆருக்கும், கதாபாத்திரத்திற்காக தன்னை உருமாற்றிக் கொள்ளும் சிவாஜிக்கும் போட்டியாக இதை செய்தார் என்றெல்லாம் கூறமுடியாது. ஆனாலும் படத்தின் தோல்வி அதை முன்னெடுக்கவிடவில்லை. மேலும் ஜெமினி சொந்தமாக தயாரித்த ஒரே படமும் இதுதான்.

நாதஸ்வரம் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது 'தில்லானா மோகனாம்பாள்' சிவாஜிதான். ஆனால் 'கொஞ்சும் சலங்கை'யில் காருக்குறிச்சி அருணாச்சலம் நாதஸ்வர இசையை ஜெமினியும் பிரதிபலித்திருப்பார். அதை நாம் நினைவுகூர்வதில்லை. சிவாஜியை விட மேக்கப் அதிகமாக போட்டு 'கணவனே கண்கண்ட தெய்வம்' படத்தில் அகோரமாக ஜெமினி தோன்றியிருக்கிறார். ஆனாலும் சிவாஜி அளவுக்கு அவருக்கு பெயர் கிடைக்கவில்லை. அதேபோல் எப்படி எம்ஜிஆரும் சிவாஜியும் டி.எம்.சவுந்தர்ராஜன் குரலில் ஜொலித்தார்களோ அதேபோல் ஜெமினி பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் பளபளத்தார். உண்மையில் அந்த எம்ஜிஆர் - சிவாஜி - ஜெமினி கணேசன் காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம். ஒருவரை ஒருவர் தட்டிக்கொடுத்திக் கொண்டு யாரையும் பாதிக்காத வண்ணம் மூவரும் முன்னணியில் இருந்தார்கள். ஜெமினி இதை அறிந்தும் கூட எந்தவித ஈகோவும் இல்லாமல், எந்தவித ரசிகர் சண்டையிலும் சிக்காமல் மற்ற இருவரையும் விட ஒருபடி அதிகமாக ஒரு நல்ல ஜென்டில்மேனாக இருந்தார்.

மூன்றாவது நாயகர்கள் - பகுதி 3 | ஈகோ அண்டாத ஜெமினி கணேசன்

ஜெமினியின் தனிப்பட்ட வாழ்க்கையும் கூட அவரது மற்ற செயல்பாடுகளை தீர்மானித்தது எனலாம். நடிகை ராஜஸ்ரீயுடன் லிவிங்-இன் உறவில் இருந்தார் என்பதை நாம் இங்கே இப்போது யோசித்தால் அவர் தனது காலகட்டத்தில் செய்த புரட்சியை புரிந்துகொள்ளலாம். என்னதான் இவை அனைத்தும் கிசுகிசுக்களாக வெளியில் பிரஸ்தாபிக்கப்பட்டாலும் கூட அதையெல்லாம் ஜெமினி பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவே இல்லை. எப்போதும் போல் "நடிப்பு வேறு.. சொந்தவாழ்க்கை வேறு" என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அதனாலேயே மற்றவர்கள் போல அரசியல் நாட்டமோ அல்லது ரசிகர்களை வளர்த்தெடுக்கும் கலையையோ அவர் கையாளவில்லை. மேலும் தனது கதாநாயக காலம் முடிந்துவிட்டதை மனதார ஏற்றுக்கொண்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியது இவரது எதார்த்தமான அணுகுமுறையை காட்டுகிறது. 

'உன்னால் முடியும் தம்பி', 'மேட்டுக்குடி', 'அவ்வை' ஷண்முகி போன்ற படங்கள் அதில் முக்கியமானவை. இதன்மூலம் இன்றைய தலைமுறைக்கும் அவரை நன்கு அடையாளம் தெரியும் மனிதராக மாற்றிவிட்டுதான் போயிருக்கிறார். இந்த அர்ப்பணிப்பு இங்கே பலரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். ஒரு மிகப் பெரிய அரசியல் மாற்றம் நடந்துகொண்ட இருந்த தருணத்தில் நாயகனாக உச்சத்தில் இருந்தும் கூட அதை கிஞ்சித்தும் தனது லாபத்திற்காக உபயோகிக்காத மனிதராக இருப்பதாலேயே அவரை 'சாம்பார்' என்று அழைத்து மகிழ்ந்தவர்களையும் சாந்தமாகவே அணுகினார் ஜெமினி. இதைவிட இவரைப் பற்றி பெருமைகொள்ள வேறென்ன இருக்கிறது?

கிட்டத்தட்ட இவரையே நகலெடுத்தது போன்ற ஒருவரை நாம் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கப் போகிறோம். சொல்லப்போனால் எம்ஜியாருக்கும், சிவாஜிக்கும், ஜெமினிக்கும் சேர்த்து தனது படங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட அந்த வள்ளலை பற்றி சற்று விரிவாகவே நாம் பார்க்கலாம்.

*** ஒவ்வொருவராய் அலசுவோம் ***

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மூன்றாவது நாயகர்கள் - பகுதி 2 | உச்சத்தை எட்டத் தவறிய ரஞ்சன்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP