களவாடிய பொழுதுகள் - திரை விமர்சனம்

களவாடிய பொழுதுகள் - திரை விமர்சனம்
 | 

களவாடிய பொழுதுகள் - திரை விமர்சனம்


நட்சத்திரங்கள்: பிரபு தேவா, சத்யராஜ் (சிறப்புத் தோற்றம்), பிரகாஷ் ராஜ், பூமிகா, இன்ப நிலா, கஞ்சா கருப்பு, சத்யன், இசை: பரத்வாஜ், பாடல்கள்: வைரமுத்து, அறிவுமதி, ஒளிப்பதிவு-இயக்கம்: தங்கர்பச்சான், தயாரிப்பு: ஐங்கரன் நிறுவனம்   

காதல் நிறைவேறாத முன்னாள் காதலர்கள், மீண்டும் சந்தித்துக் கொள்ளும்போது அவர்களுக்குள் ஏற்படும் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படம்.  

வாடகை கார் ஓட்டி அதன் மூலமாக வாழ்க்கையை ஓட்டும் பிரபுதேவா, ஒரு பயண வழியில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் பணக்காரர் பிரகாஷ் ராஜை காப்பாற்றி, மருத்துவ மனையில் சேர்த்த போது, தகவல் அறிந்து பதறி ஓடி வந்து நிற்கும் பணக்காரரின் மனைவி, இவனது முன்னாள்  காதலி பூமிகா என்று தெரியவர, அவளுக்கே தெரியாமல் அங்கிருந்து வெளியேறுகிறார். 

குணமாகும் பிரகாஷ்ராஜ், தன் உயிரைக் காப்பாறிய பிரபுதேவாவுக்கு உதவ நினைக்க, இவர்  தொடர்ந்து அவரை சந்திக்க வர மறுக்க, ஒரு கட்டத்தில் கணவரைக் காப்பாற்றியது தன் முன்னாள் காதலன் என தெரிந்துகொண்ட பூமிகா, அவரின் குடும்பம் வறுமையில் வாடுவதை பார்த்து மனைவி வழியாக உதவ, அதையும் அவர் ஏற்க மறுக்க, பின் மனைவியின் கட்டாயத்தில் பிரகாஷ்ராஜ் நிறுவனத்தில் நல்ல வேலையில் அமர்த்தப்படுகிறார் பிரபு தேவா. 

எல்லாம் சரியாய் போகையில், முன்னாள் காதலன் அருகே இருபாதைப் பார்த்ததும் பூமிகாவுக்குள் பழைய காதல் நினைவுகள் அலைபாய்கிறது! இந்தக் காதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்த போது பூகம்பம் வெடித்ததா? என்பது கிளைமாக்ஸ்.


நீண்ட கால காத்திருப்புக்கு பின் வெளியாகியுள்ள இந்தப் படம், தங்கர் பச்சானின் சருகுகள் என்கிற குறும் புதினத்தின் திரையாக்கம். நிறைவேறாத காதலை பற்றிப் பேசும் இப்படம், காதலிக்க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம். காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்த கால நினைவூட்டலாக இருக்கும் என்கிற கண்ணோட்டத்தில் இந்தப் படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான். முன்னாள் காதலர்கள் மறுபடியும் சந்திக்கும்போது அவர்களுக்குள் ஏற்படும் மன உணர்வுகளை, கண்ணியம் மீறாமல் காட்டியதற்காக தங்கர்பச்சானை பாராட்டலாம். ஆனால், நத்தை போல நகரும் திரைக்கதையாக்கத்தால் ஆர்ட் ஃபிலிம் பார்க்கும் உணர்வே மேலோங்கி நிற்கிறது. கதையும், காட்சியமைப்பும் 'அழகி' படத்தை நகல் எடுத்து போல இருக்கிறது.      

பிரபுதேவாவின் சினிமா வாழ்க்கையில் இதற்கு முன்  அவர் ஏற்று நடிக்காத மென்மையான பாத்திரத்தில் பார்க்க முடிகிறது. மனிதாபிமானம், சமூக கோபம், அடுத்தவர் மனைவியாக மாறிய முன்னாள் காதலியிடமிருந்து விலகியே நிற்கும் பண்பு என பொற்செழியனாகவே மாறியிருக்கிறார். பணக்கார பகட்டு இல்லாத, பண்பாளராக மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். நிறைவேறாத காதலை நெஞ்சில் சுமந்து, காதலனை மறக்க முடியாத வேதனையில் தவிக்கும் பூமிகாவும், அழுக்கு சேலையும் - அழுத கண்ணீருமாக வரும் பிரபு தேவா மனைவி இன்ப நிலவும், மகள் சிறுமி ஜோஷிகாவும் கவனிக்க வைக்கின்றனர். மேதின விழா மேடையில் பெரியார் வேடத்தில் தோன்றி பகுத்தறிவு பேசும் சத்யராஜ் ஒரே காட்சியில் எல்லோரையும் ஓரம் கட்டுகிறார். கஞ்சா கருப்பு, சத்யன் இருவரும் கதையோட்டத்துக்கு உதவுகின்றனர். 


வைரமுத்துவின் உணர்ச்சிகரமான வரிகளைக்கொண்ட 'சேரன் எங்கே சோழன் எங்கே..?' பாடலில் தெரிகிறது பரத்வாஜின் இசைத் திறமை. 'களவாடிய பொழுதுகள்' ரேட்டிங்  2.5/5

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP