குலேபகாவலி - திரை விமர்சனம்

குலேபகாவலி - திரை விமர்சனம்
 | 

குலேபகாவலி - திரை விமர்சனம்


நட்சத்திரங்கள்: பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ராமதாஸ், ஆனந்த்ராஜ், மசூரலி கான், சத்யன், மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, மதுசூதனன், இசை: விவேக்-மேர்வின், ஒளிப்பதிவு: ஆனந்த குமார், இயக்கம்: கல்யாண், தயாரிப்பு: கே.ஆர்.எஸ். ஸ்டுடியோஸ்.

புதையலைத் தேடிப் போகும் கும்பல் சந்திக்கும் பிரச்னைகளை கலகலப்பாக சொல்லும் படம்.          

சாமி சிலைகளை திருடி விற்கும் மன்சூர் அலிகானிடம் வேலை செய்யும் பிரபுதேவா-யோகி பாபு, இரவு நேரத்தில் பப்புக்கு வரும் இளைஞர்களை மயக்கி, அவர்களிடத்தில் பணம்,பொருட்களை   ஆட்டையைப் போடும் மார்டன் பெண் ஹன்சிகா, நைச்சியமாகப் பேசி காரை லவட்டும் ரேவதி,  கேங்ஸ்டர் ஆனந்த் ராஜ் அசிஸ்டென்ட் ராம்தாஸ்... இவர்கள் கூட்டு சேர்ந்து, குலேபகாவலி என்ற கிராமத்தில் இருக்கும் வைரப் புதையலை கொளையடிக்க செல்கின்றனர். 

இவர்களால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி சத்யன், இந்தக் கும்பலை பிடிக்க துரத்துகிறார். பிரபுதேவா -ஹன்சிகா கேங்கிற்கு வைரப் புதையல் கிடைத்ததா? போலீஸ் அதிகாரி சத்யன் இவர்களை பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பது மீதிக்கதை.


துள்ளல் நடனம், குறும்புத்தனமான காமெடி, அசத்தலான ஆக்‌ஷன், ரசிக்க வைக்கும் உடல் மொழி என எல்லா ஏரியாவையும் கவர் செய்கிறார் பிரபு தேவா. புதையலைத் தேடி வந்த இடத்தில் ஹன்சிகாவின் காதலில் விழுந்து, அவருக்காகவே உருகும் இடங்களில் ரொமான்ஸ் ஏரியாவிலும் விளையாடுகிறார்.

மெழுகு சிலைபோல இருக்கும் ஹன்சிகா குட்டியான டிரஸ் போட்டு வந்து கிளாமர் காட்டி கிறங்க வைக்கிறார். தங்கைக்காக திருட்டு தொழிலுக்கு வந்ததாக ஃபிளாஷ்பேக் சொல்லும்போது, இந்த மாடர்ன் பெண்ணுக்கு இப்படியொரு இளகிய மனசா? என நினைக்க தோன்றுகிறது.  சாதுர்யமாக கார் திருடும் ரேவதிக்கு மாறுபட்ட கேரக்டர், மனதில் நிற்கிறார் ரேவதி. மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ், முனிஸ்காந்த், யோகிபாபு, சத்யன் ஆகியோர் காமெடி ஏரியாவை நிரப்புகின்றனர். 

புதையலைத் தேடித் போகும் கும்பல் அதை எடுக்கப் படும்பாட்டை காமெடியாக சொல்வதாக நினைத்து ரசிகர்களை பாடாய் படுத்தியிருக்கிறார் இயக்குநர் கல்யாண். முழுநீள காமெடி என்றாலும், பல இடங்களில் காமெடி எடுபடவில்லை! 

ஆனந்த் குமாரின் கேமரா காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது. இரட்டையர்கள் விவேக் -மெர்வின் இசையில் பாடல்கள் பரவசப்படுத்துகிறது.

'குலேபகாவலி' நம்ம ரேட்டிங் 2.5/5

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP