தானா சேர்ந்த கூட்டம் - திரைவிமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம் - திரைவிமர்சனம்
 | 

தானா சேர்ந்த கூட்டம் - திரைவிமர்சனம்


விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக், சுரேஷ் மேனன், நந்தா, ஆர்.ஜே பாலாஜி, செந்தில், 'மெட்ராஸ்' கலையரசன், தம்பிராமைய்யா என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ள இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. 

அக்ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக் தான் இந்த தானா சேர்ந்த கூட்டம். படத்தின் ட்ரெய்லரிலேயே லஞ்சம், ஊழல் போன்ற டயலாக்குகளை பார்த்தோம். மையக் கருவில் இதெல்லாம் இருந்தாலும், படத்தை ஒரு ஜாலியான கமர்ஷியல் என்டர்டெயினராக வழங்க முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார் 'நானும் ரவுடி தான்' இயக்குநர் விக்னேஷ் சிவன். சிபிஐ அதிகாரியாக வேண்டும் என ஆசைப்படும் ஹீரோ, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளால் குறுக்கு வழியில் சென்று மக்களுக்கு சேவை செய்ய முயற்சிக்கிறார்.


80களில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர (எங்கேயோ கேட்டது போல இருக்குல்ல) மெகா பிளான்கள் போட்டு தன் பின்னால் ஒரு கூட்டத்தையே சேர்க்கிறார் ஹீரோ சூர்யா. மூச்சுக்கு நூறு முறை தானா சேர்ந்த கூட்டம் என ஹீரோ சொன்னாலும், அவர் பின்னால் தானாக யாரும் வந்து சேரவில்லை. இவரே தான் போய் எல்லோரையும் தன்னோடு சேர்த்துக் கொள்கிறார்.  

ஆரம்பம் முதல் படு ஸ்பீடாக செல்வது படத்தின் மிகப்பெரிய பலம். எந்த கேரக்டரையும், எந்த காட்சியையும் ரொம்ப சீரியஸ்ஸாக எடுக்காமல், ஜாலியாக கதை சொல்கிறார் இயக்குநர் விக்னேஷ். இதை இவரின் முதல் படத்திலும் பார்த்தோம். சீரியசான காட்சிகளில் படத்தின் முக்கிய கேரக்டர்களே தங்களை கலாய்த்துக் கொள்கிறார்கள். முதல் படத்தில் அது ஒர்க் அவுட்டானாலும், இந்த படத்தில் அது நெருடலை ஏற்படுத்துகிறது.


சூர்யா தவிர எந்த கேரக்டரையும் பற்றிய ஒரு தெளிவு இல்லை. இவர்களுக்கு என்ன உறவு, ஏன் இதெல்லாம் செய்கிறார்கள் என நமக்கு பல கேள்விகள். இதில் வேடிக்கை என்னவென்றால், படத்தில் அந்த கேரக்டர்களும் இதே கேள்வியை தான் கேட்கிறார்கள். அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை போல.

ரொம்ப எமோஷனலான ஒரு காட்சியை பயங்கர காமெடி செய்துவிட்டு, அடுத்த விநாடியே மீண்டும் நம்மிடம் சென்டிமென்ட்டை எதிர்பார்க்கிறார்கள். படம் எமோஷனலாக சுத்தமாக ஓர்க் அவுட் ஆகவில்லை. 


படத்தின் வில்லனாக 'புதிய முகம்' சுரேஷ் மேனன் நடித்துள்ளார். அவருக்கு இயக்குநர் கௌதம் மேனன் குரல் கொடுத்துள்ளார். இந்த கேரக்டருக்கு சுரேஷ் மேனனை விட பொருத்தமான ஒரு ஆள் இருக்க முடியுமா என தெரியவில்லை. கச்சிதமாக பொருந்தியதோடு, அசத்தலாகவும் நடித்துள்ளார். மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றும் கார்த்திக்கும் தனது நடிப்பில் படத்திற்கு வலு சேர்க்கிறார். 

சூர்யா, ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி, ஆர்.ஜே பாலாஜி என எல்லாருடைய நடிப்பும் சிறப்பு. அனிருத்தின் இசையும், தினேஷ் கிருஷ்ணனின் கலர்புல் ஒளிப்பதிவும், படத்தின் மிகப்பெரிய பலம்.


படம் முழுக்க காமெடியாக எடுக்க முயற்சித்து நம்மை சில இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறார் விக்னேஷ் சிவன். செந்தில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பெட்டர்மேக்ஸ் லைட், வாழைப்பழம் என சொல்லி, காமெடி என்ற பேரில் கோபப்படுத்துகிறார். பல லாஜிக் ஓட்டைகள். நாயகி கீர்த்தி சுரேஷுக்கு பேருக்கென ஒரு சின்ன ரோல். முக்கிய கதாபாத்திரங்களை ஆழமாக காட்டாமல் போனது இவையெல்லாம் படத்தின் மைனஸ்.

இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், படம் ஸ்பீடாகவும், ஜாலியாகவும் செல்வதால், தானா சேர்ந்த கூட்டம் நிச்சயம் ஒரு ஒன் டைம் வாட்ச்.

நம்ம ரேட்டிங் - 3/5

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP