வாழ்க்கை நிச்சயமற்றது: புற்றுநோயுடன் போராடும் இர்ஃபான் உருக்கமான கடிதம்

புற்றுநோயுடன் போராடி வரும் பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் தன் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எழுதியுள்ள உருக்கமான கடிதம்.
 | 

வாழ்க்கை நிச்சயமற்றது: புற்றுநோயுடன் போராடும் இர்ஃபான் உருக்கமான கடிதம்

"பெரிய கனவுகளோடும், லட்சியங்களோடும், ஆசைகளோடும் விரைவாக பயணம் செய்து கொண்டிருந்தேன். திடீரென்று என்றைக்கு யாரோ என்னைத் தட்டி "நீ இறங்கும் இடம் வந்துவிட்டது" என்று எச்சரித்தது போல் இருந்தது. நான் இறங்கும் இடம் இது இல்லையே என்று குழம்பித் தவித்தபோது, "நீ இறங்கும் இடம் இதுதான். இதுவே வாழ்க்கை" என்று யாரோ முகத்தில் அறைந்தது போல் ஓர் உணர்வு. 

வாழ்க்கை எதிர்பாராத கடல் அலைகளுக்குள் சிக்கித் தவிக்கும் பந்தைப் போன்றது. நாம் அதை எப்படியாவது நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விழைகிறோம். ஆனால், அது என்றும் சாத்தியமில்லை என்பது 'நான் இறங்கும் இடம் வந்துவிட்டது' என்று தெரிந்தவுடன், உணர்ந்தேன்."

- இது கதையல்ல, நிஜம். மரணத்துடன் போராடமும் பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் தன் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

'சலாம் பாம்பே', 'பிக்கு', 'ஹாசில்', 'மக்பூல்' போன்ற பிரபல பாலிவுட் படங்களிலும், 'லைஃப் ஆஃப் பை', 'ஜுராசிக் வேர்ல்ட்', 'இன்ஃபெர்னோ' போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்த புகழ்பெற்ற தியேட்டர் ஆர்டிஸ்ட் இர்ஃபான் கான். சமீபத்தில் அவர் நியூரோ எண்டோக்ரைன் கேன்சரால் போராடி வருகிறார். 

நோய் தாக்கப்பட்டதை அறிந்து சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டபோது, "வாழ்வில் நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடக்காது. எதிர்பாராத திருப்பங்கள் நம்மை மேன்மை அடையச் செய்யும். இந்த நோய் என்னைப் பெரிதும் பாதித்தாலும் நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும் என் மனதிற்கு நம்பிக்கை அளிக்கிறது. சிகிச்சைக்காக லண்டன் சென்றாலும் உங்கள் வாழ்த்துகளை எனக்கு அனுப்பிக் கொண்டே இருங்கள். அது என்னை வாழ வைக்கும். குணமாகி திரும்பி வரும்போது உங்களுக்கு நிறைய கதைகள் கொண்டு வருகிறேன்" என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்து விட்டுச் சென்றார்.

இந்த நிலையில், மூன்று மாதங்கள் சிகிச்சைக்குப் பின்னர் இஃர்பான் கான் ரசிகர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம் வலைதளங்களில் இப்போது வைரலாக பரவி வருகிறது.

அந்தக் கடித்தத்தில், "நியூரோ எண்டோக்ரைன் கேன்சர் ஓர் அரிய நோய் என்பதாலும், இந்த நோய்க்கு தீர்மானமான சிகிச்சை முறை இல்லாத காரணத்தினாலும், நான் இந்த நோயின் சிகிச்சை முறைக்கு ஆராய்ச்சி பொருள் ஆகிவிட்டேன். வாழ்க்கையின் கடினமான இந்த நேரத்தை எந்தவித பயமும், சோகமும் பற்றிக் கொள்ளாமல் தைரியமாக கடக்க வேண்டும் என்பதே என் முதல் வேண்டுதல்.

ஆனால், எந்த வேண்டுதலும் எனக்கு பலனளிக்கவில்லை. வலிகள் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. ஆறுதல் பேச்சு, உற்சாகப் பேச்சு எதுவும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனக்கு ஏற்பட்ட வலி, கடவுளை விடப் பெரிதாகக் காட்சியளிக்கிறது" என்று அவர் குறிப்பிடும்போது நம் மனதிலும் மிகுந்த வலி பரவுகிறது.

மேலும் அவர் தொடரும் வார்த்தைகள் படிப்பவரின் நெஞ்சை ஆட்கொள்கிறது என்பதில் சந்தேகமில்லை. 

"வெறுப்புடன் மருத்துவமனையில் நுழையும்போது தற்செயலாக என் கண்ணில் பட்டது மருத்துவமனை எதிரில் இருந்த லார்ட்ஸ் மைதானம். சிறுவயதில் என் கனவுக் கோயிலாக இருந்த ஒன்று லார்ட்ஸ் மைதானம். அருகில் சிரித்துக்கொண்டிருந்த விவியன் ரிச்சர்ட்ஸின் போஸ்டர் இந்த உலகம் எனக்கானது இல்லை என்று சொல்வதைப் போல உணர்ந்தேன். ஒரு பக்கம் மருத்துவமனை, மறுபக்கம் ஆட்ட மைதானம் நமக்கு குறிப்பிடுவது என்னவென்று யோசிக்கும்போது, வாழ்விற்கும் சாவிற்கும் இடையே ஒரே ஒரு ரோடு மட்டுமே உள்ளது என்பதை உணர்கிறேன். 

மருத்துவமனை, விளையாட்டு மைதானம் இரண்டு இடத்திலும் நிச்சயமான ஒன்று என்ற பேச்சுக்கே இடமில்லை. நிச்சயமற்ற வாழ்க்கை ஒன்றே இந்த வாழ்வில் நிச்சயமானது என்பதை வாழ்க்கையின் இந்தத் தருணத்தில் உணர்கிறேன்." - இவரின் இந்த வார்த்தைகள் நம்மை நம் நிச்சயமற்ற வாழ்க்கைக்கு தயார்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.

"இந்த உண்மையை உணர்ந்த பின்னர் எனது அனைத்து வலிகளும் வேதனைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. முழுமையான சுதந்திரத்தை உணர்ந்து, வாழ்க்கையை முதன்முறையாக ரசிப்பது போல் தோன்றுகிறது. எல்லா திசைகளிலும் எனக்காக வேண்டிய அன்பு நெஞ்சங்களின் அன்பு என்னை ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் ஆழ்த்துகிறது. இயற்கையின் தொட்டிலில் நான் அன்பாகத் தாலாட்டப்படுவதைப் போல் உணர்கிறேன்" என்று அவர் தனது கடிதத்தை முடிக்கும்போது நம் கண்களில் நீர்த் துளிகள் எட்டிப் பார்க்கக் கூடும். 

பாலிவுட் நடிகர்களும் ரசிகர்களும் இஃர்பான் கானின் இந்தக் கடிதத்தைக் கண்டு மனமுறுகி அவர் தன் நோயிலிருந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என்று வலைத்தளங்களில் செய்திகள் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

"எங்கே செல்லும் இந்த பாதை, யாரோ யாரோ அறிவார்" என்ற வாழ்வின் சூத்திரத்தையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது இர்ஃபான் கானின் உருக்கமான கடிதம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP