சர்ச்சையில் அமெரிக்க நடிகை: தாய்ப்பாலூட்டும் போட்டோவை பகிர்ந்தது தவறா?

நடிகையுமான கிறிஸ்ஸி டெய்ஜ்ன் தன் இரண்டாவது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை ஒரு புகைப்படமாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
 | 

சர்ச்சையில் அமெரிக்க நடிகை: தாய்ப்பாலூட்டும் போட்டோவை பகிர்ந்தது தவறா?

மக்களின் கவனத்தை ஈர்க்க தற்போதுள்ள திரைத்துறையினர் சமூக வலைத்தளங்களை ஒரு கருவியாக உபயோகப்படுத்தி வருகின்றனர். மக்களின் மனதில் நீங்காமல் நினைவில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் தங்கள் அக உலகம் சார்ந்த பல ஃபோட்டோக்கள், ஸ்டேட்டஸ்கள் மற்றும் செல்ஃபிகளை ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராமில் அப்லோட் செய்கின்றனர். இவ்வாறு செய்யும்போது பல நேரங்களில் சாதகமாக அமைந்தாலும், சில நேரங்களில் அது அவர்களுக்கு பாதகமாக முடிகிறது.

இன்ஸ்டாக்ராமில் அப்படி ஒரு புகைப்படத்தைப் போஸ்ட் செய்ததால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார், ஒரு அமெரிக்க நடிகை. மாடலும் நடிகையுமான கிறிஸ்ஸி டெய்ஜ்ன் தன் இரண்டாவது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை ஒரு புகைப்படமாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

"எனது மூத்த மகள் லூனா, அவளது பொம்மை குழந்தைக்கும் தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்று விரும்பியதால் எனக்கு இப்போது இரட்டையர்களை வளர்ப்பது போல் ஓர் உணர்வு" என்று தனது புகைப்படத்திற்கு விளக்கம் கொடுத்திருந்தார். பதிவிட்ட ஒரே நாளில் அப்படம் 3 லட்சம் லைக்குகளை இன்ஸ்டாக்ராமிலும் 18,000 ட்விட்டர் லைக்குகளையும் பெற்றது. ஆனால் அவற்றுடன் வெவ்வேறு விதமான எதிர்வினைகளும் குவிந்தன.

சர்ச்சையில் அமெரிக்க நடிகை: தாய்ப்பாலூட்டும் போட்டோவை பகிர்ந்தது தவறா?
 
பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவுப்பொருளாக கருதப்படுகிறது. அது குழந்தைக்கு மட்டுமல்லாமல் தாயின் உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஒரு விஷயமாக சொல்லப்படுகிறது. தாய்ப்பாலூட்டல் என்பதை வெறும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயமாக கருதாமல் உணர்வுபூர்வமான விஷயமாக கருதவேண்டும் என்பது பாட்டி காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வந்த விஷயம். மேலும் இச்செயல் மறைவாக நடக்க வேண்டிய விஷயம் என்றும், அதுவே தாய்க்கும் சேய்க்கும் நன்மை அளிக்கும் என்றும் நம்பப்பட்டு வந்த விஷயம்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமா? என்பது சற்றே யோசிக்க வேண்டிய விஷயம். சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறகடித்து பறக்க விரும்பும் பெண்கள் தாய்ப்பாலூட்டல் என்பதையும் தனது அன்றாட கடமைகளில் ஒன்றாக கருதி, மற்றோரும் அச்செயலை இயற்கையான ஒரு விஷயமாக கருத வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஆனால், சில பிற்போக்கு சிந்தனைவாதிகளிடமிருந்து இதுபோன்ற புகைப்படங்கள் எதிர்ப்புகள் இல்லாமல் தப்புவது கடினமே.

இதுபோன்ற பிற்போக்கு சிந்தனைவாதிகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுக்கவும் தவறவில்லை நடிகை கிறிஸ்ஸி டெய்ஜ்ன். 

"தாய்ப்பாலூட்டல் என்பது பெரிய பிரச்சனை இல்லை. பிரச்சனை, பார்க்கிறவர்களின் மனதில் உள்ளது" என்று கூறி அழகோ ஆபாசமோ அது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் இருக்கிறது என்பதை புரிய வைத்துள்ளார். 

"குழந்தைப்பேறு, தாய்ப்பாலூட்டல் போன்ற விஷயங்கள் இயற்கையானவை. அதனை வெளிச்சம் போட்டு ஊருக்கு காண்பிக்க தேவையில்லை" போன்ற பல எதிர்ப்பு செய்திகள் வந்ததை தொடர்ந்து கிறிஸ்ஸி டெய்ஜ்ன், "மக்களின் முட்டாள்தனமான செல்ஃபிகளையும், ஸ்விம்மிங் பூல் புகைப்படங்களையும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துவிட்டு போகட்டும் என்று விடுகிறோமே" என்று நக்கலாக பதில் அளித்தார்.

இவர் மட்டுமல்ல லிவ் டைலர், தாண்டி நியூட்டன் போன்ற நடிகைகளும் இவருக்கு முன்பு இதுபோன்ற தாய்ப்பாலூட்டும் புகைப்படங்களை மக்களுடன் பகிர்ந்துள்ளனர். தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பிரச்சார ஆர்வலர்கள் கிறிஸ்ஸி டெய்ஜ்னின் புகைப்படத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். அவரின் புகைப்படத்தை ஷேர் செய்து  #normalizebreastfeeding என்ற ஹாஷ்டேகையும் அறிமுகம் செய்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP