#BiggBoss Day 5: ஓரளவுக்கு தான் பொறுமை மிஸ்டர் பிக்பாஸ்

4ம் நாள் இன்னும் முடியவில்லை. வெங்காயம் வெட்ட தொடங்கிய யாஷிக்காவும், டேனியும் அதை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தனர்.
 | 

#BiggBoss Day 5: ஓரளவுக்கு தான் பொறுமை மிஸ்டர் பிக்பாஸ்

4ம் நாள் இன்னும் முடியவில்லை. நேற்று வெங்காயம் வெட்ட தொடங்கிய யாஷிக்காவும், டேனியும் அதை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தனர்.

நித்யா அப்போது தான் சாப்பிடுகிறார். வீட்டில் இருப்பவர்கள் அனைவரம் சாப்பிட்டு விட்டார்கள் அவர் தனியாக சாப்பிடுகிறார். ஏதாவது காரணம் இருக்கும். தட்டுடன் பாலாஜி அருகில் அமர்ந்து ‘சாப்பிட்றீங்களா’ என்றார். ம்ம்..

உள்ளே இருந்து ஆண் வேடம் போட்டுக்கொண்டு வைஷ்ணவியும், ஜனனியும் வந்தார்கள். வாடா.. கபாலி என அழைத்தார் டேனி. மீசை, தாடி வைத்தவர்கள் எல்லோரும் கபாலி தானே!

கவுண்டமணியின் ஸ்டார்ட் தி மியூசிக் இசை ஒலிக்க நித்யாவையும் பொன்னம்பலத்தையும் நீச்சல் குளத்தில் தள்ளிவிடத் தொடங்கினர் போட்டியாளர்கள். இதெல்லாம் என்ன மாதிரியான டாஸ்க் என்று தோன்றியது. கடந்த சீசனிலும் நீச்சல் குளத்தை கட்டிக்கொண்டு அழுதார் பிக்பாஸ். அவர்கள் நீச்சல் குள டாஸ்க்கை செய்யும் போது ஓவியா நினைவுக்கு வராமல் இல்லை.

சேவல் கூவும் சத்தம் கேட்டது. சேவலுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை போல தெரிகிறது. சென்றாயன், ரித்விகா தலையில் முட்டை உடைக்க தொடங்கினர். அப்போது வெங்காயம் வெட்டிக்கொண்டு இருந்த யாஷிக்கா சென்றாயனின் பின் தலையில் முட்டையை உடைத்தார். அது சென்றானுக்கு வலித்தது போல. அவர் யாஷிக்காவிடம் சென்று கூறியதும், பதிலுக்கு இது போன்ற கேமில் இப்படி தான் உடைப்பார்கள் என்றார். அவர் பேச்சில் கொஞ்சம் மேட்டிமைத்தனம் தெரிந்தது. அது சென்றாயனை எரிச்சலுட்ட முதல் முறையாக கோபப்பட்டார். இனி முட்டை உடைக்க நீ வரக்கூடாது மா என்று காட்டமாக கூறிவிட்டார்.

இதைப்பற்றி ஜனனி பேசும் போது யாஷிக்கா கையில் கத்தியை வைத்துக்கொண்டு முட்டையை உடைத்ததாக கூறினார். உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. ஒரு விஷயம் அடுத்தடுத்து ஒவ்வொருவர் காதுகளுக்கு போகும் போது அதில் அவர்கள் கற்பனைக்கு ஏற்றது போல மசாலா சேர்த்து கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் சீரியசான ஒன்றில் பேச்சில் கவனம் வேண்டும் தானே. ஜனனி அதில் சறுக்கினார்.

யாஷிக்கா பார்க்க பெரியவள் போல இருந்தாலும் அவர் குழந்தை என்று கூறினார் மும்தாஜ். அதனை மற்றவர்கள் ஆமாம் என்பது போல பேசினர். ஆனால் சென்றாயனை தவிற வேறு யார் அந்த இடத்தில் இருந்தாலும் யாஷிக்கா குழந்தை அப்படி செய்திருக்க மாட்டார் என்று தோன்றியது. சென்றாயனை அடித்தாலும் வலிக்கும் தானே.

இதைப்பற்றி வைஷ்ணவியும், ரம்யாவும் சென்றாயனிடம் சென்று பேசினர். அவர்கள் இந்த விஷயத்தை சரியாக கையாண்டனர் என்றே கூற வேண்டும். பின் நீங்க எதுக்காகவும் உங்களை கீழே வைத்து பார்க்காதீர்கள் என்றார் ரம்யா. சரியான அட்வைஸ்.

வெங்காயம் டாஸ்க் தொடர்ந்தது, அப்போது யாஷிக்கா மூன்றாவது முறையாக கையை அறுத்துக்கொண்டார். உடனே அவருக்கு முதல் உதவி செய்ய அனைவரும் ஓடி வந்தனர். சென்றாயனும் மஞ்சள் பொடியோடு வந்தார்.

போட்டியாளர்கள் டாஸ்க் செய்ய முடியாமல் தவித்தாலும் தொடர்ந்து பிக்பாஸ் பக்கம் இருக்கிறார் தலைவி. இது மற்றவர்களை எரிச்சலுட்டியிருக்கும். பின் இரவிலும் வெங்காயம் வெட்டியவர்களிடம் வந்து இது போதும் நிறுத்திங்கோங்க, பாயின்ட்ஸ் குறைந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் மும்தாஜ். உடனே அவருடன் மற்ற போட்டியாளர்களும் இதையே கூறினர். அப்போது அங்கு வீட்டின் தலைவி இல்லை. இது மும்தாஜுக்கு சாதகமான ஒன்று. அடுத்த தலைவியாகும் வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தது.

அடுத்த நாள் காலையில் ஊருக்கண்ணு உறவுக்கண்ணு எனத் தொடங்கும் ஆளப்போறான் தமிழன் என்ற மெர்சல் பட பாடல் ஒலித்தது. விஜய் பிறந்தநாளன்று ஒளிப்பரப்பாகும் என்பதால் அந்த பாடலை தேர்வு செய்திருக்க கூடும். இங்கேயும் விஜய் தேவைப்படுகிறார். விஜய் பாடல் ஒலித்தால் தளபதி ரசிகனது வீட்டு நாய்க்குட்டி கூட நடனம் ஆடும் ஆனால் போட்டியாளர்கள் சோர்ந்து இருந்தனர். 4வது நாளிலேயே இந்த நிலைக்கு ஆளாகி விட்டனர்.

பொன்னம்பலம் வந்த சீன்களில் எல்லாம் தியானம் செய்து கொண்டு இருந்தார். நல்ல வேளையாக நேற்று கச்சேரியை தொடரவில்லை.
மீண்டும் கிட்சன் பக்கம் பாலாஜி. இவர்களது தனிப்பட்ட பிரச்னையை வைத்து ஒவ்வொரு எபிசோடையும் ஓட்டிவிட நினைக்கிறார் பிக்பாஸ். அவரிடம் கூற ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. ‘ஓரளவுக்கு தான் பொறுமை’.

குழந்தை அழும் சத்தம் கேட்டதும் பாலாஜியும், மும்தாஜும் குழந்தைகள் போல நடிக்க துவங்கினர். அவர்களுக்கு டயாப்பர்ஸ் வழங்கப்பட்டது. பாலாஜி விருப்பம் இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்க மும்தாஜ் கலக்கினார். ஆனால் குழந்தை வேடமிட்டும் கிட்சன் சமாச்சாரம் குறித்து பேசிக்கொண்டு இருந்தார் கிட்சன் ஹெட்.

குழந்தையாக மாறி இருந்த பாலாஜிக்கு பவுடர் அடித்து தயாராக்கி கொண்டு இருந்தார் நித்யா. அதனை ரசித்திருக்கலாம் தான் ஆனால் பாலாஜி மற்றவர்களிடம் நித்யா பற்றி பேசியது நினைவுக்கு வந்ததால் ஃபார்வெட்டு பண்ணிவிட தோன்றியது.

ஆண் வேடமிட்டு இருந்த ஜனனியிடம் முத்தம் கேட்டு அடம் பிடித்தார் ஐஸ். ராவாக சென்ற கொண்டு இருந்த நிகழ்ச்சியை கொஞ்சம் கலர்புல் ஆக்கியது அந்த சீன். பின் முத்தக்கட்சி முடிந்த உடன் மீண்டும் டல்லடித்த வீட்டை மும்தாஜ் கொஞ்சம் சரி செய்தார். குழந்தை போலவே பேசிக்கொண்டு நான் சமைக்கலாமா என்று கேட்டது அழகாக இருந்தது.

நித்யா அனைவரிடமும் கோபமாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டை அனைவரும் கூறினர். பிரேமில் தலையே காட்டாத ரித்விகா கூட இதை கூறி விட்டு சென்றார்.

பின்னர் லக்சரி பட்ஜெட் டாஸ்க் முடிவடைந்தது. இதில் மும்தாஜ், டேனி, யாஷிக்கா ஆகியோர் போட்டியை சரியாக விளையாடியதல் அவர்களுக்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தேர்வு செய்த பொருட்கள் பிற போட்டியாளர்களுக்கு திருப்தியாக இல்லை என்பது தெரிந்தது. ஆனால் அதிலும் பெரிதாக எந்த சர்ச்சையும் நடக்கவில்லை. இப்படியாக நேற்றும் பிக்பாஸ் வீடு சுமாரான படம் போல தான் இருந்தது.

பிக்பாஸ் 2 றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP