பணம் செய்ய விரும்பு - 6: தங்கம் வாங்கலையோ தங்கம்! 

அதே தங்கம் கடந்த 5 ஆண்டுகளில் கொடுத்த லாபமும் ஆண்டுக்கு 9.15 % மட்டுமே . இதுவே 2009 ம் வருடம் விலைப் படி ஒரு கிராம் ரூபாய் 1450 - நமக்கு கிடைக்கும் வருமானம் வருடத்திற்கு 7.15 % மட்டுமே . சரி 2009ம் வருடம் வேண்டாம் 2006 ம் வருடம் என கொண்டால் 10.5% வருமானம் , அப்பாடா இப்போது சொல்லுங்கள் , தங்கம் லாபம் தானே ?
 | 

பணம் செய்ய விரும்பு - 6: தங்கம் வாங்கலையோ தங்கம்! 

ஒரு மிகப்பெரிய வெற்றியின் அடையாளமாகவும் ,பெருமையின் சின்னமாகவும் , பக்கத்து வீட்டுக்காரியின் பொறாமையாகவும் , சில  ஆண்களின் தூக்கமின்மையாகவும் இருப்பது.... கண்டுபிடித்துவிடீர்களா?  வேறென்ன... தங்கம் தான் அது!. 

ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும்  ஒரு இளம் பொறியாளர்  முத்து. அவருக்கு  வெளிநாட்டில் தங்கி வேலை செய்யும் வாய்ப்பு (on  site ) கிடைக்கிறது . முத்துவிடம் இருக்கும் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை, அவரது நெருங்கிய நண்பர் ஒருவர்  கை மாற்றாக கேட்கிறார். பத்தே நாட்களில் திரும்பத் தருவதாகவும் வாக்களிக்கிறார். மிக நெருங்கிய நண்பன் என்பதால், முத்து மறுப்பேதும் தெரிவிக்காமல் பணம் கொடுத்து உதவுகிறார்.  

முத்துவும் வெளிநாடு சென்றுவிடுகிறார். அவரின் நண்பரும், சொன்னபடியே, பணத்தை திரும்பத் தர எண்ணி, முத்துவிற்கு போன் போட்டு, அவரின் வங்கிக் கணக்கு எண்ணை கேட்கிறார். அவரிடம் பேசிய முத்து, தனக்கு தற்போது செலவேதும் இல்லை என்றும், அந்த பணத்தை, எதிலாவது முதலீடு செய்யும் படியும் நண்பரிடம் கூறுகிறார். 

அந்த  நண்பன், அவரின்  வீட்டில்  உள்ள தன்   பாட்டியை ஆலோசனை கேட்கிறார். பாட்டியின் ஆலோசனை படி இரண்டு லட்சத்திற்கும் தங்க சங்கிலி வாங்கி, போட்டோவையும்  பில்லையும்   வாட்ஸ் ஆப்பில் அனுப்புகிறார். சங்கிலியை  பத்திரமாக தன் வங்கி லாக்கரில் வைக்கிறார். எல்லாம் நல்ல படியாகவே நடந்தது .

பணம் செய்ய விரும்பு - 6: தங்கம் வாங்கலையோ தங்கம்! 

முத்துவுக்கு  இரண்டு ஆண்டு ப்ராஜெக்ட் முடிந்து, வேறு ஒன்று கிடைக்க அப்படியே கிட்டத்தட்ட, 6 ஆண்டுகள் ஆகிவிட்டது . நடுவில் சில தடவை வந்து , ஊரில், பெற்றோரையும் நண்பர்களையும் பார்த்து செல்கிறார் . 
6 ஆண்டுகள் கழித்து வந்து, இங்கே வீடு வாங்க நினைக்கிறார். 

கையிருப்பு போக மேலும் 3 லட்சம்  பணம் தேவை. தங்க சங்கிலி நியாபகம் வருகிறது. அதை விற்றால் பணத் தேவையை சமாளிக்கலாம் என நினைக்கிறார். நண்பன் லாக்கரில் இருந்து கொண்டுவந்து கொடுக்க, இருவரும் நகைக்கடைக்கு செல்கிறார்கள்.  

நகையின்  மதிப்பை  கேட்டவர் , தலை சுற்றி விழாத குறை , வாங்கிய விலையை விட, இருபதாயிரம் குறைவு. அதாவது 1.8 லட்சம் மட்டுமே. இது எப்படி சாத்தியம் ? 
நாம் பல முறை செய்தித்தாளிலும், டிவி யிலும் பார்க்கிறோம், தங்கம் வரலாறு காணாத உச்சம், கிராமுக்கு ரூபாய் 30  உயர்வு இப்படி.  இவ்வாறு இருக்க வாங்கிய விலையை விட, 20 ஆயிரம் எப்படி குறையும் .?

பணம் செய்ய விரும்பு - 6: தங்கம் வாங்கலையோ தங்கம்! 

6 ஆண்டுகளுக்கு முன் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 3100 ரூபாய் ( 2012 ம் வருடம் ). செய் கூலி , சேதாரம்   10 % கூடுதல் . வாங்கிய நிமிடமே 10 % விலை அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது . இன்றைய விலை அதுவும் சுமார் 3050 ரூபாய் .( ஜூன் 2019 ம் வருடம் மாத துவக்கத்தில் ). இப்படி இருக்க விற்பனை விலை  எப்படி கிடைக்கும் ?

ஏதேனும் இரண்டு நாட்களை எடுத்து நமக்கு ஏற்றார் போல கூறுவது என்  நோக்கமல்ல.  

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. இதில் முத்து  தன் முதலீட்டை பற்றி அக்கறை காட்டவில்லை; 
2. அடுத்தவரின் ஆலோசனை: - ஆலோசனை  வழங்கியவர் தங்கத்தில் லாபம் பெற்றிருக்கலாம், எல்லோருக்கும் எல்லா நேரத்திலும்  அது ஏற்றதாக அமையாது; 
3. நோக்கம் அற்ற முதலீடு - எதற்கு முதலீடு செய்கிறோம் ,எவ்வளவு காலம், கிடைக்க வேண்டிய தொகை  போன்றவை பற்றிய தெளிவின்மை ; 
4. தேர்ந்தேடுத்த முதலீடு - தங்க நகை என்பது  அணிந்து அழகு பார்க்க மட்டுமே - இதுவே அதன் முதல் நோக்கம் , தேவை படும் பொது விற்க , அடகு வைக்க இதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். நகையின் சந்தோஷத்தை விலை பேச  முடியாது. அது போலவே அணிகலனை முதலீடாக பார்க்க இயலாது. தங்கத்தின் மீது  முதலீடு செய்ய வேறு பல வழிகள் உண்டு .

சரி தங்கம் லாபம் தருமா ? தரும்...ஆனால் தராது ...எப்படி இரண்டும் சாத்தியம் ?
கடந்த ஒரு வருடத்தின் லாபம் 15 %  ஒரு வருடத்திற்கு முன்  ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்க நாணயங்களை வாங்கி இன்று விற்றால் கிடைக்கும்  லாபம் 15 ஆயிரம் . உண்மைதான் . 

அதே தங்கம் கடந்த 5 ஆண்டுகளில் கொடுத்த லாபமும் ஆண்டுக்கு 9.15 % மட்டுமே .  இதுவே 2009 ம் வருடம் விலைப் படி ஒரு கிராம்  ரூபாய் 1450 - நமக்கு கிடைக்கும் வருமானம் வருடத்திற்கு 7.15 % மட்டுமே . சரி 2009ம் வருடம் வேண்டாம்  2006 ம் வருடம் என கொண்டால் 10.5% வருமானம் ,  அப்பாடா  இப்போது  சொல்லுங்கள் , தங்கம் லாபம்  தானே ?

அதனால் தான்  சொன்னேன் - தங்கம்  லாபம் தரும் சில நேரங்களில் தராது . காலம் தான் பதில் சொல்லும் .
சில மூத்த குடிமக்கள் அவர்களுக்கு தெரிந்த - பழக்கப்பட்ட  முறையாக செய்த முதலீடு  தங்கம் , நிலம் , வீடு மட்டுமே . அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது . அவர்கள் நிதானம் காத்தார்கள் .

 30 ஆண்டுகளுக்கு முன் தங்கம் வாங்கி  பாதுகாத்து, இன்று விற்றால் பெருத்த லாபம் தந்திருக்கும்  தான் . ஆனால் அதே போன்று அடுத்த 30 ஆண்டுகள் இருக்குமா? 

நகைகளின் மீது மோகம்  கொண்டு வருடத்திற்கு 4-5 முறை அணிந்து , வீட்டில் ,பேங்க்கில் வைத்து பூட்டி ,பாதுகாத்து   அதை முதலீடாக பார்ப்பது ஏற்புடையது அல்ல. 

பணம் செய்ய விரும்பு - 6: தங்கம் வாங்கலையோ தங்கம்! 

சரி நகை வாங்கலாமா வேண்டாமா?
நம் முதலீடு தங்கமாக இருக்கலாம். ஆனால் அவை நகைகளாக அல்லாமல், காசுகளாக, கட்டிகளாக , ETF எனப்படும் பத்திரங்களாக  என பல முறைகள் உள்ளன. அதாவது, ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம், டி மேட் அக்கவுன்ட் வைத்திருப்போர், அவற்றை ஆன்லைன் கோல்ட் ஆக வாங்கலாம். 

இதன் மூலம், மார்க்கெட் விலைக்கு நீங்கள் தங்கம் வாங்குவதோடு மட்டுமின்றி, அதற்கு செய்கூலியோ, சேதாரமோ
கிடையாது. மேலும், அவை பொருளாக கையில் இல்லாத காரணத்தால், அது களவு போய்விடுமோ என்ற அச்சம் இருக்காது. 

பணம் செய்ய விரும்பு - 6: தங்கம் வாங்கலையோ தங்கம்! 

தேவைப்படும் நேரத்தில், ஆன்லைனில் அன்றைய விலைக்கே விற்றுவிடலாம். இதில் வாங்குபவர் யார் எனக் கூட நமக்கு தெரியாது. ஆனால், அன்றைய தங்கத்தின் விலை சரியாக நம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பேங்க் லாக்கருக்கோ, மார்வாடி கடைக்கோ ஓட வேண்டிய அவசியம் இருக்காது. 

சரி, எவ்வளவு வாங்கலாம்?  பல பொருளாதார நிபுணர்களின் அறிவுரைப்படி  நம் மொத்த  முதலீட்டில், 2-5 % இருத்தல் நல்லது . 10 % க்கு மிகாமல் இருப்பது உத்தமம் . வருடத்தில் 50 ஆயிரம் சேமிக்க நினைத்தால் , தங்கதின் மீது முதலீடு 5 ஆயிரம் இருப்பது நலம் .

இப்போது சொல்லுங்கள் உங்கள் சிந்தனை எப்படி ? .. மீண்டும் தொடர்வோம்... 

- சுப்ரமணியன் நடேசன் -

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP