ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் ராஜினாமா

கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.
 | 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் ராஜினாமா

கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர். 

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது. 

அவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் 37 விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக, 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை நிரந்தரமாக நிறுத்தி விட்டது.

இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக நேற்று மட்டும் 4 விமானச் சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்க முடியாமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து வேலைநிறுத்ததில் குதிப்போம் என விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல விமானங்களால் வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடக்கும் விமானிகள் பிரச்சனைக்கும் ஜெட் ஏர்வேஸ் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் எனவும் அகில இந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் ராஜினாமா

இந்த அறிவிப்பையடுத்து மேலும் சில விமானச் சேவைகளும் முடங்கும் நிலை உருவானது. இதனால் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை இந்நிறுவனத்துக்குத் தேவைப்படுகிறது.

இந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்த நிலையில், தற்போது தள்ளாட்டத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழுமத்தின் அவசர கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.

நீண்டநேர ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா  ஆகியோர் இன்று பிற்பகல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP